ஏன் இரவை இவ்வளவு வேகமாகப் புணர்ந்து கொண்டிருக்கிறேன். மூளை அதிர யார் சுத்தியால் அடிப்பது. மின் விசிறியின் ஓசை ஏன் அறையின் அமைதியை இப்படி திங்கிறது . பசிக்கு இத்தனை பெயர்கள் வைத்து யார் ஆற்றுகிறார்கள். என்னை நானே கொன்று கொல்ல வேண்டுமென ஆசையாய் இருக்கிறது. மற்ற ஜீவ ராசிகளைப் போல இந்த உலகத்தில் வாழப் பயிற்சி எடுத்துக் கொள்ளாத என்னால் தற்கொலையைத் தவிர வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை.
காலையிலிருந்து அம்மா அழைத்த வண்ணமிருக்கிறாள். அப்பனுக்கு நோய் முற்றி விட்டதாம். "சாகும் முன்பாவது வந்து பார் என்பதே அவளது பேராசையாய் இருந்தது. ஆனால் நான் எப்படிச் செல்வது கையில் சுத்தமாகக் காசேயில்லை. யாரிடமாவது கடன் கேட்கலாமா? அதற்குப் பதிலாகப் பிச்சை எடுத்தால் என்ன?
கடன் அந்த வார்த்தை தான் எங்கள் குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது .விவசாயத்திலிருந்து, ஆடம்பரம் வரை எல்லாவற்றுக்கும் கடன்,வட்டி கட்டி கட்டியே அப்பன் தேய்ந்து போனான். இதில் குடிப்பழக்கம் வேறு. இத்தனை சந்தித்த என்னால் எப்படி கடன் வாங்க முடியும். வாழ்நாள் முழுதும் கடன் வாங்காமல் வாழ முடியுமா தெரியவில்லை முயல்கிறேன் அவ்வளவு தான். இதோ என் வயிறு சோற்றைப் பார்த்துப் பல நாளாகி விட்டது. ஆனால் கடன் அது மட்டும் வாங்கப்போவதில்லை. என் கண்டை கால் நரம்பு அறுபட்டு உயிர் துடிக்கும் நிலையில் கிடந்தாலும் சரி ஓசியில் என்னால் ஒரு வாய் சோறு கூட தின்று பிழைக்கமுடியாது.
நானும் எல்லா ஆர்வ கோளாறுகளைப் போல் நடிகனாகி விடலாம் எனும் அற்ப கனவோடு சென்னைக்கு வந்து இதோ ஏதோ உப்புமா கம்பேனியில் இரண்டு வருடத்தை கழித்து விட்டேன். இயக்குநருக்கு சிகிரெட் , டீ வாங்கி கொடுத்தே காலம் ஓய்ந்து போனது.
குடலுக்குள் எந்த வித சத்தமும் இல்லாமல் இருப்பது அதற்கு எவ்வளவு நிம்மதியாக இருக்குமோ இப்போது அதற்கு நேர் எதிராக இப்போது நான் அவதிப்படுகிறேன். வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் ஒரு சீன் கூட சினிமாவில் நடிக்க வில்லை. உப்புமா இயக்குநர்களின் கால்களை நக்கி, நக்கி நாக்கில் உமிழ்நீர் கூட இப்போதெல்லாம் சுரப்பதில்லை. இந்த மாதம், அடுத்த மாதம் படம் ஆரம்பிப்போம் எனச் சொல்லிச் சொல்லியே காலத்தைத் தின்று விட்டார்கள்.
நானும் பல சினிமா கம்பெனிகளுக்கு போனேன். ஆனால் வாய்ப்பு என்னமோ மங்கலாகத்தான் தெரிந்தது. அடிப்படையில் நானொரு கோழை. எப்படி இந்த சினிமாக்குழியில் வந்து விழுந்தேன் எனத் தெரியவில்லை. சொல்லிக் கொள்ளும் அளவு படிப்பறிவுமில்லை. படிக்க வைக்க வழியுமில்லை. அப்பாவின் கடன் சமாச்சாரம் என்னையும் கூலிக்காரனாக்கி அமுக்கியது . உரமூட்டை தூக்கித் தூக்கியே தேய்ந்து போன எனக்கு சினிமா தான் ஒரே ஆறுதல். திரையரங்கங்களைத் தேடித் தேடிப்போய் சினிமாவை ரசிப்பேன். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிப்படங்களையும் பார்ப்பதுண்டு. எனக்கு கதாநாயகர்களின் வேடத்தை விட இணை நடிகர்களின் கதாப்பாத்திரங்களைப் பிடிக்கும். அதில் பொய்மையோ, பந்தாவோ இருக்காது. உள்ளது உள்ளபடியே இருப்பதால் எனக்கு குணச்சித்திர நடிகனாகவே சேர ஆசை.முதலில் கரகாட்டக்குழுவில் கோமாளியாய் இருந்தேன். என் ஆட்டத்தைப் பார்த்து சிரிக்காத பெண்களே இல்லை. அந்த உத்வேகம் தான் என்னை சினிமா பக்கம் தள்ளியது.மேற்கொண்டு கரகாட்ட தொழிலும் முன்பை போல் வருமானம் இல்லாமல் நலிந்து போனது. இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய பெண்கள் எல்லாம் இப்போது சித்தாள் வேலைக்கு போகிறார்கள்.நான் சம்பாதித்துச் சேர்த்து வைத்த காசை அள்ளிக் கொண்டு மெட்ராஸ் மந்தைக்கு வந்து வருசமாகிவிட்டது. ஊர் பக்கம் போவதேயில்லை. எப்போதாவது போன் செய்து பேசிக் கொள்வதுண்டு.
நிற்க...
நான் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நீங்கள் இதனைக் கதையாகவோ, ,அல்லது சிறுகதை என எப்படி வேண்டுமானாலும் கணித்துக் கொள்ளலாம். என் கண் பார்வை மங்கி சுற்றிலும் சிவப்புக் கோடுகள் குறுக்கும் நெடுக்குமாய் பாய்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருக்கும் அப்பாவின் உடல் வாசனை அறை எங்கும் வீசுகிறது. இனி அவர் இறந்து விட்டால் எப்படியும் மருந்து செலவு மிச்சம் என உள்ளூர சந்தோசப்படுவாள். ஆனால் கொஞ்சமேனும் கண்ணீர் விடுவாள். இத்தனை வருடம் தன்னோடு வாழ்ந்த அந்த உடல் இப்போது உபாதையில் கிடக்கிறதே என்ற ஏக்கம் இருக்காதா என்ன? இருந்தாலும் மனிதனுக்குள் ஒழிந்திருக்கும் அந்த சுய நலத்தின் கோர முகம் நாகப்பாம்பின் நாக்கை போல விசத்தைக் கக்கக்கூடியது. போதும் இதற்கு மேல் இந்த மனிதர்களின் அற்ப குணங்களைப் பற்றி என்னால் சிந்தித்து எழுத முடியவில்லை. அப்பாவின் மார்புச் சளி என் நெஞ்சை ஆட்கொள்கிறது. ஒரு டம்ளர் சுடு நீர் கிடைத்தால் போதும் அந்த சளியை எரித்துவிடுவேன். அம்மாவுக்கு இனி என் துணை கண்டிப்பாக தேவைப்படும். அந்த நொண்டி கால்களை வைத்து எந்த வேலைக்கு போவால் பாவம். இந்த 36 வது வயதிலேயே இவ்வளவு பெரிய சொட்டை வந்திருக்க கூடாதது தான். என்ன செய்வது தூக்கமின்மை,ஆரோக்கியமற்ற உணவு, மனச்சோர்வு இப்படி அனைத்தும் திமிறி எழும் போது என்னால் என்ன செய்ய முடியும். அறையின் நூலாம்படைகள் எனை பார்த்து ஏளனமாகச் சிரிப்பதை நீங்களும் பார்க்கிறீர்கள் தானே? அப்பாவின் கரைபடித்த மஞ்சள் நிற பல் வரிசை பியானோவை போல் என் முன்னே ஊர்கிறது. யாரோ உலுப்புகிறார்கள் .. விழித்து பார்த்தால் நான் நடிக்கும் படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர் .
" சார்.. அடுத்த சீன் போய்றலாமா சார்? விக் மாட்டிகங்க ? "
நான் கண்களை தேய்த்து விட்டு எதிரே பார்க்கிறேன். கேரவணின் சுற்றிலும் கண்ணாடிகள். கனவு கலைந்து நதியில் இலையாய் மிதந்தது. நான் என் சொட்டைத் தலையில் விக்கை மாட்டிக் கொண்டு சாட்டுக்கு ரெடி ஆனேன்.
-சிபி சரவணன்.
கருத்துகள்
கருத்துரையிடுக