முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெடா விருந்து - சிறுகதை

 


                   கெடா விருந்து

   ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது. நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன். எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள். பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம். அவர்களை பார்த்தாலேசொறி சிரங்கு பிடிச்சவங்களா? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார். எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான். அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான். அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள். தமிழாசிரியர் கூட அவனை

இவன பாருங்கடா, மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவானட்டாம், இந்த ஹாஸ்டல் பயலுகல்ல இவன்  ஒருந்தந்தேன் ஒழுங்கா படிக்கிறான். மத்ததுயெல்லாம் பாரு, முப்பதஞ்சு மார்க் வாங்கவே முக்கிட்டு இருக்குதுகஎன பாராட்டுவார்.

எனக்கு கோகுல் மீது எப்போதும் கரிசனம் உண்டு. பாவமாக உட்கார்ந்திருப்பான். வகுப்பில் யாருடனும் அதிகமாக பேச மாட்டான். கொக்கின் மூக்கை போல தாடையும், பூனை கண்ணும், முள்ளம்பன்றி போல் நீட்டிருக்கும் செம்பட்டை முடி, தலையோடு பெஞ்சில் காம்பசை வைத்து  தோண்டிக்  கொண்டே இருப்பான். அவனது உப்பறிந்து போன சட்டையிலிருந்து வரும் நாற்றத்தை சகித்து கொள்ள முடியாமல், அவனை என் பெஞ்சில் இருக்கும் மாணவர்கள்

ஹாஸ்டல் பக்கத்துல இருக்கிற பீ மந்தையில எதும் கெடந்து உறங்கிட்டு வருவியாடா? சை ஏண்டா இப்படி நாறுதுஎன திட்டிக் கொண்டே, சட்டை காலரால் மூக்கை பொத்திக் கொண்டு சிரிப்பார்கள்.

டே.. இவனுங்க ஹாஸ்டல எவனும் குளிக்கவே மாட்டானுங்கடா, சும்மா மூஞ்சிய மட்டும் கழுவிட்டு வந்து உக்காந்துக்குவானுங்கஎன இன்னொருவன் கத்தி சொல்ல மொத்த வகுப்புமே விழுந்து, விழுந்து சிரித்தது. அப்போது கோகுல் மட்டும் கறி சமைக்கும் நாளில் எங்கள் வீட்டு வாசலில்  நிற்கும் பூனை பார்ப்பது போல் பார்த்தான்.

விடுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு அடிக்கடி சொறி சிரங்கு வருவதால், விரல் சந்துகளில் புண்கள் இருக்கும். அதற்கு அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்த கழும்பை  தேய்து விட்டிருப்பார்கள். விரல் இடுக்குகளில் அந்த கழும்பு தேங்காய் பால் நிறத்தில் மின்னும். சுமாராக படிக்கும் எனக்கு, கோகுல் கணக்கில் இவ்வளவு மார்க் வாங்குவது கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கும். ஒவ்வொரு முறை கணக்கு டீச்சர் பேப்பர் தரும் போதும், கோகுல் நூத்துக்கு 96 என குரலை தாழ்த்திக் கூறி அவனை அழைப்பார். அவன் குனிந்த தலையோடு டீச்சரிடம் சென்று பேப்பரை வாங்கிக் கொள்வான். பின்னர் டீச்சர்எல்லாரும் கை தட்டுங்க…” என பிரம்பை மேசையில் அடித்து மிரட்டுவார். உடனே மாணவர்களின் கைத்தட்டல்கள் கேட்கும். கணக்கு பாடத்தில் 35 எடுக்கவே நான் படாத பாடுபடுவேன். எனக்கு எப்படியாவது கோகுலிடம் கணக்கு பாடம் சொல்லி தரச் சொல்லி கேட்டு படிக்க வேண்டுமென தோன்றியது.

அன்று விளையாட்டு பீர்டில், விளையாட்டு ஆசிரியர் எங்களை கிரவுண்டை சுற்றி 5 சுற்று ஓடச் சொன்னார். பின்னர் நாங்கள் எல்லோரும் அவர் முன்பாக வரிசையாக நின்றிருந்தோம்.
லே.. கிரவுண்ட சுத்தி இருக்கிற செடிய பூராம் பிடுங்குங்க, ஒவ்வொருத்தேன் கிட்டையும் கை நிறைய செடி இருக்கணும், இல்லனா யாரும் விளையாட போக முடியாதுஎன கையில் புட்பாலை வைத்து கொண்டு அதற்றினார். நாங்கள் வேகமாக ஓடி கண்ணுக்கு படும் பெரிய பெரிய செடிகளை பிடிங்கினோம். கோகுலும், அவனது ஹாஸ்டல்  நண்பர்களும், புளியமரத்தருகே போய், பாதி பழுத்த, உத புளியங்காய்களை பறித்து தின்றார்கள். பின்னர் வேக வேகமாக, அங்கிருந்த பெரிய பெரிய விசச்செடிகளை பிடிங்கி கை நிறைய செடிகளோடு வந்தார்கள். என் கையில் ஒரு கை அளவுக்கு கூட செடி இல்லை. இப்படியே போனால், வாத்தியார். பிரம்பால் குண்டியில் அடித்து, மீண்டும் செடியை பிடுங்க துரத்துவார். நான் என்ன செய்வதென தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னருகே வந்த கோகுல் தன் கையிலிருந்த, செடிகளில் கொஞ்சம் எனக்கு கொடுத்தான். நான் லேசான புன்னகையுடன், அதனை வாங்கிக் கொண்டு அவனோடு நடந்தேன். பீட்டி வாத்தியார், பான் பிராக்கை போட்டு மென்றுக் கொண்டே, எங்களை பார்த்தார். அவர் முன்னால் நாங்கள் எங்கள் கையிலிருந்த செடியை கொட்டினோம், பின்னர் அவர், தன் கையிலிருந்த கால்பந்தை எங்களை நோக்கி வீசினார். அதனை பிடித்துக் கொண்ட நான் வேகமாக ஓட, கோகுலும் அவன் நண்பர்களும், என் பின்னால் ஓடி வந்தார்கள். பின்னர் மற்ற மாணவர்கள் வரும் வரை நாங்கள் குறுகிய இடைவெளியில் நின்று பந்தை உதைத்துக் கொண்டு விளையாடினோம்.

அப்போது, கோகுல் தன் டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு உத புளியங்காயை (பாதி பழுத்த புளியம்பழம்) எனக்கு கொடுத்தான். அதை வாங்கி சாப்பிடும் போது நாக்கில் லேசாக ஒரு இனிப்பு படர்ந்தது. பின்னர் மென்று தின்ன தின்ன புளிப்பு கூடி உச்சந்தலை வரை ஏறியது.

எப்படிடா, இதெல்லாம் திங்கிறீங்க?”

எங்களுக்கு இதாண்டா மிட்டாயிஎன கோகுல் சிரித்தான். எனக்கு அப்போது அதற்கான அர்த்தம் புரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் கோகுலுக்குமான நட்பு அதிகமானது. கோகுலின் அம்மா, அப்பா இருவரும் கடன் பிரச்சனையில் ஊரை விட்டு ஓடி கேரளாவின் இடுக்கி பகுதியில் ஒரு ஏலக்காய் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவனை இந்த அரசினர் விடுதியில் சேர்த்திருக்கிறார்கள். ஹாஸ்டலில் ஜெயில் கைதிகளுக்கு போடும் சாப்பாடை போல் தான் சோறு போடுவார்களாம். காலையில் தரமில்லாத அரிசியில் சமைத்த சாதமும், தண்ணீராய் அறைக்கப்பட்ட தேங்காய் சட்டினியும் தான் சாப்பாடு. என்றாவது ஒரு நாள் இட்லி போடுவார்கள், அது கூழாங்கல்லை போல இருக்கும் என கோகுல் சொல்வான். மதிய சாப்பாடு எப்போதும் சாதமும், ஹாஸ்டலை சுற்றி வளர்க்கப்பட்டுள்ள  பப்பாளி மரத்தில் முளைத்த பப்பாளி காய்களால் சமைக்கப்பட்ட குழப்பு தான். என்றாவது அதிசயமாக கேரட், பீன்ஸ் எல்லாம் கண்ணில் காட்டுவார்களாம், வாரத்துக்கு ஒரு நாள் முட்டையும், சிக்கன் கொழம்பும் அதுவும் ஒப்புக்குத்தான். இரவு உணவில் எப்போதும் ரசம் தானாம். அவர்கள் ஹாஸ்டலில் ரசத்தை சுட்ட கழினி தண்ணி”  என கிண்டல் செய்வார்களாம். இவ்வளவுக்கு மத்தியில் ஒரே தொட்டியில் குளிப்பதால் அவர்களுக்கு சொறி சிரங்கு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வருசத்துக்கு இரண்டு முறை கோகுலின் அம்மா, அவனை பார்க்க வரும் போது பத்து ரூபாய் தருவாராம். அதனை வைத்து தான் அவன் கடைகளில் ஆசை தீர இனிப்பு பண்டம் சாப்பிடுவான். அதுவும் ஒரு வாரத்தில் தீர்ந்து விடும். பின்னர் எப்போதும் போல, வாசலில் உள்ள தள்ளு வண்டி கடையில், மிளகு உப்பு தடவிய கொய்யா காயையும், மாங்கீத்துகளையும், எச்சில் ஊற பார்த்து விட்டு பள்ளிக்கு வருவான்.

அவனோடு பழக ஆரம்பித்து நானும், சேர்ந்து அவர்களோடு ஊர் சுற்ற ஆரம்பித்தேன். மட்டமான சாப்பாடை தின்று தின்று வற்றி போன நாக்குக்கு தீனி போட அவர்கள் விடுமுறை நாட்களில் பேயை போல காட்டு பக்கம் நடப்பார்கள். ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போனால், தென்னந் தோப்புகள் இருக்கும். யாருக்கும் தெரியாமல் தோப்புக்குள் நுழைந்து தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். சேர்த்து வைத்திருந்த காசில் வாங்கிய ஒரு சன்பீஸ்ட் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து, கொஞ்சம் தேங்காய் சில்லை மென்று கொண்டே, பிஸ்கெட்டை மென்று சாப்பிட்டார்கள். அன்று நானும் அவர்களோடு அந்த ருசியை அனுபவித்தேன். எல்லாம் நமக்கு எளிதாக கிடைக்கும் போது, எதனின் ருசியும் அவ்வளவாக நம்மை ஆட்கொள்வதில்லை என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.

ஒரு நாள் நான் எங்கள் வீட்டில் சமைத்த சாப்பாட்டை கோகுலுக்கு உணவு இடைவேளையில் கொடுத்தேன். அப்போது அவன் அதனை சாப்பிட மறுத்து விட்டான்.

வேண்டாம்டா.. இதெல்லாம் சாப்பிட்ட எங்க வீட்டு சாப்பாடு நியாபகம் வரும். அப்பறம் தினமும் இதே மாதிரி சாப்பிடனும்னு தோணும். நிதமும் நீ கொண்டு வர முடியுமா?”

லே.. நான் கொண்டு வரன் டா

இல்லடா, வேணாம், உங்கம்மா திட்டுவாங்க, ஹாஸ்டலுக்கும் சாப்புட வரலைன்னா வார்டன் வேற அடிப்பான்என கூறிவிட்டு அவன் என் டிபன் பாக்ஸையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹாஸ்டலை சுற்றியுள்ள பப்பாளி மரத்தில் ஒரு பப்பாளி காயை கூட பழுக்க விட மாட்டார்கள். அதற்கு முன்பாகவே அது சமையல்கட்டுக்கு போய்விடும். இதையும் மீறி யாராவது பப்பாளி காயை திருடி இரும்பு பெட்டியில் ஒளித்து வைத்து பழுக்க வைத்து சாப்பிடுவார்களாம். அதுவும் பாதி பழுத்த பப்பாளி பழத்தை கடித்து திங்கும் போது கிண்ணம் நிறைய கேசரி சாப்பிட்டது போல இருக்குமென கோகுல் சொல்வான். இப்படி ஒளித்து வைத்து சாப்பிடுவது எப்படியோ சமையல்காரனுக்கு தெரிய வர, சில மாணவர்களை மொட்டை வெயிலில், தலையில் இரும்பு பெட்டியை சுமந்தவாரே முட்டி போட வைத்தாராம்.

கோகுலும் அவன் நண்பர்களும் ஹாஸ்டல் விதி முறைகளை மீறி இரவு நேரங்களில் ஹாஸ்டலின் மாடியிலிருந்து பைப் வழியாக இறங்கி, அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மட்டை மில்லுக்கு வேலைக்கு போவார்களாம். இரவெல்லாம் வேலை செய்து விட்டு விடியும் முன்னே ஹாஸ்டலில் வந்து படுத்துக் கொள்வார்கள். வரும் வழியில் திராட்சை தோட்டங்களில் நுழைந்து சட்டை நிறைய திராட்சை பழங்களை பறித்து கொண்டு சாப்பிட்டு கொண்டே வருவோம் என கோகுல் சிரித்து கொண்டே சொன்னான்.

ஒரு நாள் நானும், அவர்களோடு வேட்டைக்கு சென்றிருந்தேன். வேட்டைக்கு என அவர்கள் சொல்வது கிடைப்பதை சாப்புடுவதைத்தான். அன்று அவர்களுக்கு எப்படியாவது புரோட்டா சாப்பிட வேண்டுமென்ற ஆசை ஒட்டிக் கொண்டு விட்டது. அதற்கு காசு தேற்ற வேண்டுமென சாலையில் கிடக்கும் மது பாட்டில்களை எல்லாம் பொறுக்கி கொண்டு போய் பழைய இரும்புகடையில் போட்டார்கள். அப்போதும் நான்கு பேருக்கு புரோட்டா சாப்பிட காசு போதவில்லை. ஊருக்கு வெளியே நாங்கள் நடந்து சென்ற வழியில் ஒரு சிறிய பேச்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் வெளியே பெரிய சூலாயுதம் ஒன்று இருக்கும். அதனை சுற்றி சூடமெற்றிய தழும்புகள் இருக்கும். அதனை கவனித்த கோகுல்

டே.. பேசாம உண்டியல்ல கை வச்சிரலாமா?” என கேட்க, அவனுடன் வந்த மற்ற இருவரும் புன்னகையுடன் தலையை ஆட்டினார்கள்.

உண்டியல்ல காசெடுத்தா, பாவம் டா, சாமி பழி வாங்கிரும்என்றான்.

நம்ம பசிக்கு தீனி போடாத, சாமி என்னடா சாமிஎன்றவாரே அவன் மெல்ல கோயிலை சுற்றி யாரும் இருக்கிறார்களா என பார்த்தான்.

லே.. நீ ரோட்டுல நின்னு யாரும் வராங்களா பாரு, யாராச்சும் வந்தா, செருப்ப வச்சு தார்ரோட்டுல சத்தமாதேயிஎன்றான். நானும் ரோட்டில் நின்று கொண்டேன். இரண்டு பக்கமும் யாரும் வருவதாய் தெரியவில்லை.

அவர்கள் மூவரில் ஒல்லியாக இருந்த ஒருவனை கோயில் கேட்டின் கம்பி வழியாக திணித்தார்கள். அவனும் திணறி உள்ளே நுழைந்து, கதவில் கட்டப்பட்டிருந்த, ஈய்யக்குடம் போன்ற அந்த உண்டியலை தலை கீழாக திருப்ப முயன்றான். ஆனால் உண்டியலை திருப்புவது கஷ்டமாக இருப்பதாக  உள்ளே இருப்பவன் பிதற்றிக் கொண்டே இருந்தான். உடனே  கோகுல், வாசலில் கிடந்த ஒரு துருப்பிடித்த கட்டு கம்பியை எடுத்து கதவு இடுக்கு வழியாக கையை விட்டு, கம்பியை உண்டியலின் கழுத்தில் இறுக்கினான். பின்னர் அதனை பிடித்து மெல்ல கீழே திருக, உண்டியல் கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்தது. கீழே விழும் சில்லரை சிதறி விடக்கூடாது என்பதற்காக கோயிலுக்குள் உண்டியலுக்கு கீழாக சட்டையை விரித்திருந்தார்கள்.

அப்போது தூரத்தில் அனல் நெளியும் அந்த தார்ச்சாலையில், யாரோ சைக்கிளில் வருவது தெரிந்தது. அதனை கவனித்த நான், “லே.. ஆள் வராங்கடா.. சீக்கிரம்..சீக்கிரம்என கத்தினேன்.

உடனே கம்பியில் நுழைந்திருந்த பையன் மெல்ல தன்னை கம்பியிலிருந்து வெளியே இழுத்தான். அப்போது கோகுல்டேடே.. கொஞ்ச நேரமிருடா..” என கத்த, அவன் பயத்தில் என்ன செய்வதென தெரியாமல் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அந்த ஆள் சைக்கிளில் எங்களை நெருங்கிக் கொண்டே இருந்தார். நான் அவர்களை அவசரப்படுத்திக் கொண்டே மரத்துக்கு பின்னால் பதுங்கிக் கொண்டேன். சைக்கிள் பெடல் சுற்றும் ஓசை எங்களை நெருங்க, ஆரம்பிக்கும் அதே சமயத்தில், உண்டியல் திரும்பி சில்லரை கொட்ட ஆரம்பித்தது. அந்த சத்தம் கேட்டு சுதாரித்த, அந்த ஆள்லேய்யார்ரா.. அது கோயிலுக்குள்ள..” என கத்த ஆரம்பித்தார். உடனே அவர்கள் மூவரும், சில்லரையை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு காட்டுக்குள் ஓட, நானும் அவர்களோடு தலை தெறிக்க ஓடினேன். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஓடி பின்னர் ஒரு பம்பு செட்டு அருகே நின்று தொட்டியில் வாயை விட்டு மூச்சிறைக்க நீர் குடித்தோம். பின்னர் கோகுல், என்னை பாத்து சிரிக்க, நானும் அவனை பார்த்து சிரிக்க, எங்களை அறியாமல் நாங்கள் சிரிக்க ஆரம்பித்தோம்.

நாட்கள் வளர, எங்கள் நட்பு இன்னும் அதிகமாக ஆரம்பித்தது. ஆனால் என்னால் கோகுலை முழுவதுமாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. பள்ளிக்கு வந்து விட்டால் உம்மென இருக்கும் அவன், ஊர் சுற்றும் போதும் மட்டும் குருவியாகி விடுகிறான். குருவி எனும் போது தான் நியாபகம் வருகிறது. கோகுல் கவட்டை அடிப்பதில் கில்லாடி. பறவை எதுவாக இருந்தாலும் அதனை சுட்டுத் தின்று விட வேண்டும் அவனுக்கு. குருவி, மைனா, புறா, பொறிக்குயில் இப்படி எதைப் பார்த்தாலும், வில்லில் , கல்லை வைத்து குறி பார்த்து அடிப்பான். அவன் அடித்த அடியில் பறவையின் பாதி நெஞ்சுக்கறி தெறித்து விடும். பின்னர் மீதியை வைத்து  ஹாஸ்டல் சமையல் கட்டில் திருடிய, மிளகாய் பொடியை தடவி சுட்டு தின்பார்கள். ருசியற்று போன அவர்கள் நாக்கும், நல்ல உணவுக்காக காத்திருக்கும் அவன் வயிற்று குடலும் எப்போதும் கழுகு போல இரையை தேடிக்கொண்டே இருக்கும்.

என்னதான் விதவிதமாக காட்டில் கிடைப்பதை தின்றாலும், சாப்பாட்டின் மீது கோகுலுக்கு பெரிய போதாமை இருந்தது. காட்டில் பறிக்கும் மாங்காய்களை கொண்டு அவனே ஊறுகாய் போல் கிண்டி பெட்டியில் வைத்திருப்பான். பின்னர் காலையில் சட்னிக்கு பதிலாக சோற்றில் அதனை பிசைந்து உண்பான். அதுவும் இல்லாத சமயத்தில் கொஞ்சமாக மிளகாய் பொடியை சாப்பாட்டில் போட்டு, தேங்காய் எண்ணை பிசைந்து சாப்பிடுவான். ஒரு சில சமயம் எங்கள் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில், கொலக்கட்டை, பொங்கல் என எது வைத்தாலும் கோகுல் எடுத்து சாப்பிடுவான். பிள்ளையாரின் இடுப்பிலும், தலையிலும் கட்டும் குற்றாலத்துண்டை கூட  எடுத்துக் கொண்டு பிள்ளையாரை அம்மணமாக்கி விடுவான்.

வருடத்திற்கு ஒரு முறை எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கும். ஒரு மாசத்துக்கு முன்பாக ஊரடக்கி காப்பு கட்ட ஆரம்பித்து விடுவார்கள். அன்றிலிருந்து திருவிழா நாள் வரை கறி சாப்பிட மாட்டார்கள். எங்கள் ஊர்காரர்களுக்கு ஆட்டு கறி என்றால் அவ்வளவு பிரியம். ஆட்டு தலை, ரத்தம், குடல், என வித விதமாக சமைத்து ருசிகண்ட வாய் அவர்களுக்கு. எனக்கு ஆட்டு கறியை விட கோழிக்கறி மீது தான் பிரியம். ஆனால் கோகுல் ஆட்டுகறி சாப்பிட்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்டதெனவும், எப்படியாவது ஒரு நாள் நல்ல கெடா விருந்து சாப்பிட வேண்டுமென என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

நான் அவனிடம் இன்னும் சில தினங்களில் ஊர் திருவிழா வர இருப்பதாகவும், அந்த திருவிழாவில் ஊரே வெறி கொண்டு ஆட்டு கறி திங்கும் எனவும் சொன்னேன். திருவிழா அன்று கோயில் நிறைய ஆடுகளை வெட்டி, கறியை கூறு போடுவார்கள். ஒவ்வொரு தலக்கட்டுக்கும், ஆட்டு கறி,குடல், ஈரல்  என பிரித்து வைப்பார்கள் எனவும், ஆடு உரிப்பவர்கள் சொந்த காரர்களாக இருந்தால் ஒரு ஆட்டு கால், தலைக்கறி கிடைக்கும் எனவும் சொன்னேன்.

இன்னும் ரெண்டு வாரம் தான் வயித்த காயப்போட்டு வை.. நானே எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி கெடா விருந்து வைக்கிறேன்

நிஜமாவாடா. ஆட்டுக்கறி சாப்பிட்டு வருசக்கணாக்காச்சுடா, குட்டி பையனா இருந்தம்ப, அம்மா சமைப்பாங்க, ஆனா எனக்கு அப்பலாம் பிடிக்காது, சூப்புக்கூட மூஞ்சிய சுழிச்சுகிட்டேதான் சாப்பிடுவேன். ஆனா இப்ப ஆட்டுக் கறி சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.. அப்டியே நல்லா கொழம்புள வெந்த எலும்ப எடுத்து வாயில வச்சு உறுஞ்சா செமயா இருக்குமாமே, கணேஷ் சொன்னான்.”

கொடிக்கம்பம் ஏத்திட்டாங்கனா.. ஊரே ஜெக ஜோதியா இருக்கும்டா, இரண்டு நாளுக்கு முன்னுக்கவே  நைட்டு கரகாட்டம், சர்க்கஸு, அப்பறம் மறு நாள் ஊர்ல ஆடலும் பாடலும், தெருவெல்லாம் கடை, கடையில் அல்வா, லட்டுனு ஏகப்பட்ட பலகாரமெல்லாம் கிடைக்கும்டா. அப்பறம் அஜித் டாலரு, விஜய் டாலரு, பலூனு, மோதிரம், காப்புனு எல்லாம் விப்பாங்க.. கடைசி நாளுக்கு முன்னுக்க வாழைப்பழம் சூரவிடுவாங்க, சாமி தூக்கிட்டு போறப்பெல்லாம் கொட்டும், மேளவும், காது சவ்வே அந்து போயிரும். தீவாளிக்கு சட்டை எடுக்குறமோ இல்லையோ, இதுக்கு எங்க அப்பா எனக்கு புதுச்சட்டை எடுத்து குடுப்பாரு, அப்பறம் இரண்டாவது நாளு சாய்ங்காலம் வண்டி வேசம் நடக்கும். ஒவ்வொரு டிராக்டர், தொடுக்குலையும் ஆளுக, சாமி வேசம் கட்டி ஆடிட்டு வருவாங்க செமயா இருக்கும். இரண்டாவது நாளு விடிய காலையில தான் கெடா வெட்டுவாங்க அப்ப வந்துரு.. நான் காட்டுறேன். அப்படியே வெட்ட வெட்ட, கருப்பசாமி மூஞ்சியில ரத்தம் தெறிக்கும். அதுகப்பறம் மத்தியானமா நான் உன்ன எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.”

என்றதும், அவன் முகத்தில் பெரும் புன்னகை படர, என்னை கட்டி அணைத்துக் கொண்டான். அவன் உடல் மிகவும் சூடாக இருந்தது. அதற்கு பிறகு அவன் அன்று முழுவதும் என்னிடம் எதுவும் பேசவில்லை. அவ்வப்போது, என் வாட்டர் கேனை எடுத்து, எடுத்து தண்ணீரை குடித்து கொண்டே இருந்தான்.

ஊர் திருவிழாவின் முதல் நாளில் கரகாட்டம் தாரதப்பட்டைகள் முழங்க, சிறப்பாக தொடங்கியது. அன்று இரவு என் அப்பா என்னை கரகாட்டம் பார்க்க கூட்டிச் செல்லவில்லை. அங்கு ஆட்டகாரர்கள் இரவெல்லாம் இரட்டை வசனங்களில் பேசி ஆடுவார்கள் என பாட்டி சொன்னாள். நான் இரவெல்லாம் தூங்கும் போது தூரத்தில் ஒலிபெருங்கி வழியாக இரட்டை வசன பாடல்களையும், மேள சத்தத்தையும், ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.



அதிகாலையில், நான் எழுந்து கருப்பசாமி கோயிலுக்கு போனேன். எனக்கு முன்பாக கோகுல் அங்கு வந்து உட்கார்ந்திருந்தான். இன்னும் சில நேரத்தில் சாகப்போகும் ஆடுகள் தலையை தொங்க போட்டு ஆங்காங்கே கிடந்த குத்து கல்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இருள் மெல்ல கரைந்து லேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தது. மஞ்சள் வேட்டியும், நெற்றி நிறைய பட்டையோடும் வந்த பூசாரி முரட்டு அரிவாளோடு அங்கு வந்தார். உரிமையாளர்கள் ஒவ்வொருவராக ஆட்டை கொண்டு வந்து கருப்பசாமி சிலை முன்பாக நிறுத்த, பூசாரி சாமி வந்தது போல் ஒரு ஆட்டம் ஆடி, மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆட்டின் ஆணைக்காக காத்திருந்தார். அது தலையை லேசாக குலுக்கியதும், ஒரே போடாக அரிவாளை வீச, தலை துண்டாக போனது. ஆட்டின் ரத்தம் தெறித்து, கருப்பசாமியின் முகத்தை நிரப்பியது. பின்னர், வெட்டப்பட்ட ஆடுகள் சிலை முன்பாக குவிந்து கிடக்க, அதன் கால்கள் அசைவுகளோடு, தங்கள் ரத்தம் படிந்த செம்மண்ணை உதைத்துக் கொண்டிருந்தன.

சிறிது நேரத்தில் ஆடு உரிப்பவர்கள் வந்து ஒவ்வொரு ஆடாக தூக்கி கொண்டு போய் அங்கிருக்கும் புளிய மரத்தில் கட்டினார்கள். பின்னர் ஆட்டின் தோலை நோட்டு பேப்பர் கிழிப்பது போல் லாபகமாக உடலிலிருந்து உரிக்க ஆரம்பித்தார். சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த தோல் வியாபாரி, ஒவ்வொரு ஆட்டு தோலாக அள்ளி கேரியரில் போட்டான். பின்னர், குடலை உருவி ஆட்டின் பச்சை கழிவை வலித்து ஒரு வாளியில் போட, மும்பரமாக ஆடு உறிக்கும் வேலை நடந்தது. ஆடு உறிக்கப்பட்டதும், ரெண்டு தெருக்களுக்கு என கும்பல் கும்பலாக பிரிந்து இரும்பு தகரத்தை விரித்து அதில் ஆட்டுகறி, எலும்பு, குடல் என கொஞ்சம், கொஞ்சமாக கூராக பிரித்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலிருந்து வந்த ஆட்கள் தங்கள் பாத்திரத்தில் ஆட்டுக்கறியை வாங்கி கொண்டு நகர்ந்தார்கள். குடல் கறி, ரத்தம், ஆட்டுக்காலுக்கு போட்டி போட்டு  அடித்துக் கொண்ட ஒரு கும்பல் தூக்குவாளிகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இன்னொரு புறம் ஒரு கூட்டம், பீடி குடித்து கொண்டே, ஆட்டுக்காலை தீமூட்டி சுட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த கோகுலுக்கு அப்போதே வயிறு கிள்ள ஆரம்பித்தது. நான் அவனை மதியம் ஒரு 2 மணிக்கு மேல் வீட்டுக்கு வர சொன்னேன். அவனும் மகிழ்ச்சியாக சரியென தலையை ஆட்டி விட்டு சென்றான்.

அன்று அப்பா சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு, திருவிழா பார்க்க சென்று விட்டார். அம்மாவிடம் நான் ஏற்கனவே என் நண்பன் கோகுல் வீட்டுக்கு சாப்பிட வருவான் என கூறியிருந்தேன். அம்மாவும்சரி வரட்டும்என சொல்லியிருந்தாள். ஆனால் அதற்கு முன்பாகவே, சித்தியோடு சேர்ந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வருவதை பார்க்க சென்று விட்டாள். கோகுல் ஹாஸ்டலில் மதிய சாப்பாடு சாப்பிடாமல் என் வீட்டை நோக்கி  நடந்து வந்தான். வரும் வழியில் தெருவெங்கும் கடைகளும், வண்ண வண்ண உடைகளில் மனிதர்கள் நடமாடி கொண்டிருந்தாளும், அவன் வயிறு ஆட்டுக்கறியை மட்டும் தான் கேட்டு கொண்டிருந்தது. என் வீட்டை நெருங்கி வந்து வாசலில் நின்று என்னை அழைத்தான். நான் அவனது கூச்சத்தை உடைத்து வீட்டிற்கு இழுத்துச் சென்றேன். டீவியை போட்டு விட்டு

பாத்துட்டு இருடா.. சோறு போட்டு வரேன்என நான் கூறிவிட்டு சமையலறைக்கு செல்ல, அவன் தயக்கத்தோடு தரையில் உட்கார்ந்தான். நான் இருப்பதிலே பெரிய தட்டு ஒன்றை எடுத்து சோறு குறைவாகவும், குழம்பு கறியை கொஞ்சம் அதிகமாவும் ஊற்றிவிட்டு, ரத்த பொறியலும்குடல் கறியும் தட்டில் வைத்து எடுத்து வந்தேன்.

அப்போது பாட்டி இருமிக்கொண்டே அங்கு வந்தாள். கோகுலை ஒரு மாதிரியாக உற்று பார்த்த அவள் தடியை வைத்து மெல்ல நகர்ந்து வந்து நான் கையில் தட்டுடன் நிற்பதை பார்த்தாள். பின்னர் சேரில் தடுமாறி அமர்ந்தாள். “யார்ரா இது.. உன் கூட்டுக்காரனா?”

ஆமா பாட்டி

அவள் கோகுலை உற்றுப் பார்த்துயாரு மகேன்பா நிய்யி?”

நான் ஹாஸ்டல் பாட்டி, இந்த ஊரில்லஎன சிரித்துக் கொண்டே கோகுல் சொல்ல, பாட்டியின் முகம் மாறியது.

ஹாஸ்டலா? எந்த ஊரு நிய்யி..”

கோகுல் புன்னகையுடன்தெக்குப் பாட்டி

உடனே பாட்டிக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை, தன் கையிலிருந்த கோலை எடுத்து நான் வைத்திருந்த தட்டை கோவமாக தள்ளிவிட்டு கொண்டே

அவன் என்ன குலம் கொத்திரமுனே தெரியல.. அவன வீட்டுக்குள்ள கூட்டி உக்கார வைப்பியாஎன கத்தினாள். என் கையிலிருந்த தட்டு பறந்து  அதிலிருந்த ரத்த பொரியல் சிதறி அவன் முன்னால் போய் விழுந்திருந்தது.

கோகுலுக்கு என்ன நடக்கிறதென தெரியாமல், எழுந்து வீட்டை விட்டு இறங்கி வேகமாக ஓடினான்.

 “ நீ என்ன லூசா பாட்டிநான் அம்மாட்ட கேட்டு தான் அவன கூப்ட்டேன்என திட்டினேன். உடனே அவள் என்னை தன் கையிலிருந்த தடியால் அடிக்க ஆரம்பித்தாள்.

----

  இது நடந்து சில தினங்கள் ஆகிற்று . அதற்கு பின்னால் அவன் சரியாக என்னோடு பேசவே இல்லை. ஒரு நாள் அவன் இல்லாத போது , அவன் பையிலிருந்த நோட்டை எடுத்து பார்க்க, அதில் நிறைய கதைகள் இருந்தன. அவை முழுக்க முழுக்க அவனது அனுபவ சுவடுகளே.  அதிலிருந்த கெடா விருந்து என்ற கதை அன்று நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து  எழுதபட்டது. அதில் என் வீட்டை விட்டு ஓடிய பின் என்ன நடந்தது என அவன் எழுதியிருந்தான்.  அது சிறுவர்மலர் கதைக்கு ஒத்து இருப்பதால் அதனை உங்களுக்கு புரியும்படியாக மாற்றியிருக்கிறேன்.

-----

நான் ஓடிக் கொண்டிருந்த தெருவின் எல்லா வீட்டிலிருந்தும் கறிக் குழம்பு வாசம் வந்தது. இன்னும் நான் எனது ஓட்டத்தின்  வேகத்தை அதிகப்படுத்தினேன். பஸ் ஸ்டாண்டில் இருந்த டீக்கடையின் முன்பு மூச்சிறைக்க நின்று, குடத்திலிருந்த தண்ணீரை மோந்து மடமடவென வயிறு நிறைய குடித்ததும், வயிற்றின் எரிச்சல் குறைந்து, லேசாக உடல் குளிர்ந்தது. பின்னர் மெதுவாக சாலையை கடந்து நடந்தேன். அப்போது திடீரென குளிர்ந்த காற்று வீச, வானில் இடி முழக்கம் கேட்டதும், முளைப்பாரி எடுத்து சென்ற பெண்கள் குழவி போட்டனர். அவர்களை கடந்து நடந்து, கருப்பசாமி கோயிலின் முன்பாக போய் நின்றேன். காலையில் ரத்தத்தால் நனைந்திருந்த கருப்பசாமியை நன்றாக குளிப்பாட்டி, உடல் முழுதும் சந்தனம் பூசி கழுத்து நிறைய மாலை அணிவித்திருந்தார்கள். சூரிய ஒளியில் மின்னிய அவரது சிமெண்ட் அரிவாளில் கொஞ்சம் கூட பதமில்லை. கடும் பசியின் கிறக்கத்தால்  மெல்ல அங்கே போய் அமர்ந்தேன். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டு திருப்பினேன்.

ய்ய்யாகருப்பாஎன் பிள்ளைக்கு இது தலை பிரசவம். நீ தான்பா.. எந்த குறையுமில்லாம பிரசவத்த முடுச்சு வைக்கணும்னு வேண்டிருந்தேன். உன் புண்ணியத்துல பேச்சி பொறந்தா.. பிள்ளை பிறந்ததும் மொத கெடா வெட்டு உனக்கு தான்னு சொல்லிருந்தே.. சொன்னத செஞ்சுட்டேன். எல்லாத்துக்கும் நல்ல கை கால் சுகத்த குடுயா

என்றவாரே தன் கையில் இலையால் மூடியிருந்த படையலை கிழவி   கருப்பசாமிக்கு வைத்தாள். அவளோடு வந்திருந்த மகளும் பேத்தியும், விழுந்து கும்பிட்டுவிட்டு, பூசாரியிடம் திருநீர் வாங்கிக் கொண்டு நகர, பூசாரி படையிலில் இருந்த குவாட்டரை எடுத்து வேட்டி மடிப்பில் திணித்து கொண்டு, தட்டிலிருந்த சில்லரையையும் அள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். அதனை கவனித்து கொண்டிருந்த நான் சுற்றிப் பார்த்துவிட்டு கருப்பசாமியின் காலருகே இருந்த படையலை பார்த்தேன். இளம் பச்சை வாழை இலையும், பொன்னி அரிசியில் பொங்கிய சோறின் மீது ஆட்டுக் கறிக் கொழப்பு ஒழுக, அதன் அருகே சுண்ட வறுத்த உப்புக் கறியும் இருந்தது. கோகுலின் முகத்தில் ஏகாந்த புன்னகை படர, நாவில் கடலலை அளவுக்கு உமிழ் நீர் சுரந்ததுஇதற்கு மேலும் காத்திருக்காத என் கால்கள் வேகமாக கருப்பசாமி சிலையை நோக்கி ஓடின

  - சிபி சரவணன்

 

 



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...