இளஞ்சிவப்பு நிற ரத்தம்
மத்தியான வெயிலில் ரயில் தண்டவாளங்களின் மீது பட்ட சூரிய ஒளி மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. பிளாட்பாம் நம்பர் 3ல் பீச் ஸ்டேசன் ரயிலுக்காக சில முகங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு முகங்களிலும் விடுமுறை நாள் முடிந்து தங்கள் அலுவல் பணிக்குச் செல்வதற்கான மனநிலையில் நனைந்த காகிதங்களாய் சுருங்கியிருந்தன. நடை மேடையில் யுவதிகள் கூட்டமொன்று வாயை கோணித்துக்கொண்டு செல்பி எடுக்க ஆயத்தமாக, நடைமேடையில் பாதிக்கு மேலான தலையைத் தொங்கப் போட்டு செல்போனுக்குள் நுழைந்திருந்தனர்.
நான் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டு எனக்கு நேர் எதிரே இருந்த சிவப்பு சுடிதாரை நோட்டம் விட்டபடியிருந்தேன். அவள் கழுத்தோரத்தில் மினுக்கிய தழும்பும், லேசாக துரித்துக்கொண்டிருக்கும் எழும்பும் பார்க்க கவர்ச்சியாக இருந்ததெனத் தான் சொல்ல வேண்டும். மேலும் காதோரமாய் காற்றுக்கு ஊறும் கூந்தல்கள் எனை கிரங்கடித்தன.
“ அப்போது நடை மேடை இரண்டில் வேளச்சேரி செல்லும் ரயில் புறப்படத் தயாராக இருக்கிறது…” என்ற அறிவிப்பை ஒலித்தது. அதனைக் கேட்டும் கேட்காததும் போல் என் கவனம் முழுவதும் அந்த சிவப்பு சுடிதார் மீது நிறைந்திருந்தது. அவள் அணிந்திருந்த இறுக்கமான லெக்கின்ஸ் அவளது தொடைப் பகுதியை இன்னும் கவர்ச்சியாகத் தூக்கிக் காட்டியது. இதில் கால் மேல் கா போட்டு வேறு உட்கார்ந்திருந்தாள் என்றால் மற்றதை நீங்களே யுகித்துக்கொள்ளுங்களே !
ரயில் கிளம்பும் சத்தம் வேளச்சேரி வண்டி மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. படிக்கட்டுகள் வழியே மனித பிண்டங்கள் தங்களைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வண்டியில் ஏறின.எப்போதும் ரயில் நிலையத்தைப் போகும் இரு வித மெல்லிய சங்கு சத்தம் போல் கேட்கும் அதைக் கூர்மையாக கவனித்தவாறே சிவப்பு சுடிதார் பக்கம் திரும்பினேன். அவள் கால்களை ஒட்டி ஊனமான பெண்ணொருத்தி தன் உடலைத் தரையில் உரசிக்கொண்டே வந்து நின்றாள். தனது கைகளை உயர்த்தி என் தேவதையிடம் யாசகம் கேட்டாள். ஆனால் அவளோ கண்டுகொள்ளாதது போல் செல்போனை நோண்டினாள். மீண்டும் , மீண்டும் காற்றில் அந்த பெண்ணின் உள்ளங்கைகள் உயர்ந்து ,உயர்ந்து யாசகம் கேட்க அவள் மசிவதாயில்லை. பின் எவ்வித சலிப்பும் இல்லாமல் அந்த பெண்மணி தன் உடலைத் தேய்த்துக்கொண்டே எனை நோக்கி வந்தாள். நான் மீண்டும் அவள் மீது பார்வையைத் திருப்பினேன். முன்பு பார்த்த அதே சிவப்பு சுடிதார், பட்சியான மச்சம், படரும் கூந்தல் ஆனால் ரசிக்கத்தான் மனமில்லை. உங்களுக்கு உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அப்போது ஒரு புழுவைப் போலத்தான் எனக்குத் தெரிந்தாள்.
இப்போது அந்த ஊனமான பெண் எனை நோக்கி வருகிறாள். அவள் சுடிதார் உடுத்தியிருக்க வேண்டும். அழுக்கேறி உப்பரித்து அவள் சுடிதாரின் முதுகு பகுதியில் வெள்ளை வெள்ளையாய் படிந்திருந்தது.வலது கால் சூம்பிப்போய் முருங்கைகாயை விடச் சன்னமாக மேல் நோக்கித் தூக்கி நின்றது. இடது கால்களே தெரியவில்லை.கைகளால் தான் ஊர்ந்து வந்தாள். கொஞ்சம் பெருத்த உடல்வாகும் , கருப்படித்த கன்னங்களும்,துயரங்களால் இருண்டு போயிருந்த முகமும் என்னை ஒரு மாதிரி உருக்கி எடுத்தது. தரையில் உடலைத் தேய்த்து , தேய்த்து வருவதற்குக் கொஞ்சம் நாழியானது. என்னால் அந்த உருவத்தைப் பார்க்க முடியவில்லை. தொண்டையில் உருளையாய் கத்திகள் கீறுவதைப் போல் ஒரு உணர்வு. அந்த பெண் இப்போது என் காலருகில் , அதே யாசக பாணி , அதே உள்ளங்கை, ஆனால் அந்த கண்கள் ஏக்கத்தின் வெளிப்பாடற்ற கண்கள்,இருளின் ஒளியில் மினுக்கும் பூனையில் கண்களைப் போல அவ்வளவு பிரகாசம்,நான் ஒரு நிமிடம் சுயத்தை இழந்து அந்த கண்களுக்குள் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் கிழித்துக்கொண்டிருந்த கத்தி அடிவயிற்றில் வந்து வயிற்றைக் கலக்கியது. நான் பதற்றத்தில் பின்பாக்கெட்டில் இருந்த பர்சை எடுக்க தடுமாறினேன். பத்து ரூபாய்த் தாளைக் காற்றில் மிதக்கும் அந்த உள்ளங்கை மீது வைத்ததும் படக்கென மூடிக்கொண்டது. ஆனால் அந்த கைகள் கீழிறங்க வில்லை.அவள் எனை பார்த்து தனது காவி நிறத்தில் கரை படிந்த பற்கள் தெரிய உதடுகள் விரித்துச் சிரித்தாள். மீண்டும் தரையில் கையை ஊன்றி உடலைத் தரையோடு தேய்த்து , தேய்த்து நகர்ந்தாள். அவள் பின்புறத்தில் புட்டத்தைச் சுற்றி அழுக்கும் ,ஈரமுமாய் ஆங்காங்கே ரத்தக் கரைகள் ஊறி இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. என்னால் அதனை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்கள் எப்படிப் பார்த்தாலும் எனக்குள் சிறிதேனும் மனிதம் இருக்கும் தானே ?
எனக்கு நேர் எதிரே ஒரு ஆள் ஒற்றைக் கையால் பொட்டலத்தை பிரித்துக்கொண்டிருந்தார். பாதியளவு மட்டுமே வளர்ந்து நின்றுபோன அவரது இடது கையின் மொட்டுப் பகுதியை அண்டக் கொடுத்து எப்படியோ சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்துவிட்டார். மாதக்கணக்கில் மழிக்காத தாடியும் , செம்பட்டை அப்பிய சுருள் முடியும் ஒரு மாதிரி அவரை ரயில் வாசி என யூகிக்க வைத்தது. பாட்டுப் பாடி காசு கேட்பவராக இருக்கலாம் என்பது என் கணிப்பு.
அந்த மாற்றுத் திறனாளி பெண் மீண்டும் எனை நோக்கி ஊர்ந்து வந்தாள். இப்போது வேகமாக , அதிவேகமாக வந்து எனது இருக்கையில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். டீ கடையிலிருந்து ஒரு ஆள் சிரித்துக்கொண்டே அவள் முன்னே டீ கப்பை வைத்துவிட்டுப் போனான். அவள் தனது சூம்பிய கால்களை விரித்து உட்கார்ந்து கொஞ்சம் பெருமூச்சு வாங்கினாள். நான் அவளது தொடைகளைக் கவனிக்கையில் அந்த இடத்தில் துணி நீளமாகக் கிழிக்கப்பட்டு பிறாண்டி எடுத்தது போல் கீறல்கள் இருந்தன. நான் பார்ப்பதைக் கவனித்தவள் வெடுக்கென மீண்டும் கால்களை ஒடுக்கினாள். கேவலமான ஒரு பார்வையில் எனை பார்த்துக்கொண்டே, தனது மேல் உதட்டை திறந்து தேநீரை உறிஞ்சத் துவங்கினாள்.
“ எப்படி இவ்ளோ பெரிய காயம் அந்த இடத்துல ?” என்னை அறியாமல் உணர்ச்சி பெருக்கில் அவளிடம் கேட்டேன். எந்த வித பதிலும் தராமல் மீண்டும் டீயை குடித்தாள்.
“ பிளீஸ் சொல்லுங்க ? என்ன ஆச்சு , எதாவது பிரச்சனையா ?
அவள் எனை முறைப்பது போல் நோட்டமிட்டாள். பின் மீண்டும் டீயை உறிஞ்சிக்கொண்டே எங்கள் எதிரே சாப்பிட்டுக்கொண்டே அந்த ஒத்தக்கை நபரை பார்த்தவாறே
“ காலு மொடமானாலும் நானும் பொம்பள தான ? என்ன மட்டும் ஆம்பளங்க விடுவாங்களா என்ன? “
“ யாரு அவனா ? “
அவள் சிரித்துக்கொண்டே
“ யாரா இருந்தா என்ன ? அவனை மாதிரி எத்தனை ஆம்பளங்க ? கிழிஞ்சது , கிழிஞ்சது தான் , காசுப்போட்டியா , ட்ரெயின் ஏறுனியாணு பொழப்ப பாத்துப்போ “ எனச் சொல்லிவிட்டு மீண்டும் தன் சூம்பிய கால்களைப் பின்புறமாக வளைத்துத் தேக்கி ,தேக்கி ஊர்ந்தாள்.அவளின் பின்புறத்தில் இளஞ்சிவப்பு நிற ரத்தம்.
சிபி சரவணன்

செம கதைங்க ....
பதிலளிநீக்கு