முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாக்சி -சிறுகதை

அந்த இருள் அவ்வளவு இலகுவாக இருந்திருக்க வேண்டும் பௌர்ணமி இருளைத் தின்று உடல் கூசும்  மெல்லிய ஒளியை எங்கும் பரப்பியது.  தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறின.

  பெட்ரோல் பங்கை ஓட்டிய சாலையோரத்தில் முழு சிரிப்போடு மையில் கல்லை போல ஒருத்தி நின்றிருந்தாள்.  பாவப்பட்டு உருகி வழியும் முகவாகு, கூர்மையான கண்கள் , வகிடெடுத்து  சீவிய முடி தோல் மீது சர்பமாய் வீற்றிருக்கும் மல்லிகை பூ.  அந்த இருளிலும் சிலுசிலுக்கும் ஜிகினா போட்ட  சேலை . முந்தானையை  படபடப்போடு நோண்டிக்  கொண்டிருக்கும் கைகள். சாலையின் இடதும் வலதும் அவளது கண்கள் மாறி,மாறி பயணப்பட்டன.

    பயத்தைப் போக்க வாய் நிறைய வெற்றிலை போட்டு மென்று கொண்டே  நின்றிருந்தாள்.
மஞ்சள் கலர் நம்பர் பிளேட் போட்ட வெள்ளைக் காரொன்று மெல்ல ஊர்ந்து வந்து நின்றது.வண்டியிலிருந்தவன் கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தான்.அவன் விழிகளில் நிறைந்திருந்த தூய்மை அவனை நம்பி வண்டியில் ஏறலாம் என அவளுக்கு தோன்றியது. எதுவும் பேரம் பேசாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.வண்டி மெல்ல ஊர்ந்து நகர்ந்து பின்னர் வேகமெடுத்தது.

  அவளின் முதுகுப்பகுதியில் வியர்வை நீர் திவலைகள் ஊர்ந்து ஓடின.காதோரமாய் ஒதுங்கி நின்றிருந்த அவள் முடி காற்றுக்கு அவள் கன்னங்களை உரசியது. வண்டியை ஓட்டிக்கொண்டே அவளது மார்பை ரசித்த  அவனை கவனித்து விட்டாள். படக்கென மாரப்பை சரிசெய்து கொண்டு திரும்பிக்  கொண்டாள். மற்ற கிராக்கிகளை போல் அல்லாத அவளின் செய்கைகளை பார்த்த அவனுக்கு சந்தேசம் வந்தது. "வேர்க்குதா ? " என கேட்டுக் கொண்டே அவனது விரல்கள் மெல்ல அவளது  தொடையில் கை வைத்தது. கூசிப்போன அவளது  தொடை அவன் கைகளை விடுவிக்க துடித்தது.

" நீ உண்மையாவே ரூட்டு தானா? "
" ஆமா ஏன் பாத்தா தெரியலையா? 
"நீ நடந்துக்கிறதெல்லாம் பாத்தா அப்டி தெரியலையே,தொழிலுக்கு புதுசா "
"ம்...ஒரு வாரமாகுது,புருசன் சரியில்ல குடிகாரேன். கஞ்சிக்கும் வழியில்ல,அதான் ப்ரண்ட் கூப்புட்டானு இதுல இறங்கிட்டேன்."
"பார்றா, இதென்ன காய்கறி ஏவாரமா?  சீக்கு வந்து சாகப்போறடி"
"ஆமா அப்டியாச்சும் சாகுறேன். இந்த வக்கத்தவன் கூட வாழ்றதுக்கு பதிலா செத்துட்டாக்கூட நிம்மதி "
       வண்டி மெதுவாக மோட்டல்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
  "எனக்கு ரொம்ப பசிக்குது,காலையில இருந்து சாப்பிடல ,சோறு சாப்புட்டு அப்பறமா போவமா? "
      இதை கேட்டதும் அவனது முகம் சுறுங்கிப் போனது. சாலையோரமாக இருந்த ஒரு தள்ளு வண்டி கடையை ஒட்டி வண்டியை நிறுத்தினான். கொத்து புரோட்டா வேண்டுமென கேட்டு வாங்கி சாப்பிட்டாள். கொத்து புரோட்டாவை குழந்தையின்  ரசனையோடு சாப்பிடும் அவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. கடைசியாக தட்டிலிருந்த சால்னாவை கூட விடாமல் வழித்து சாப்பிட்டாள்.
   " ஆம்லெட் வேணுமா? "
   "இல்ல கலக்கி " என அசடு வழிந்தாள்.

பொதுவாக வண்டியை காட்டோரமாக நிறுத்தி விட்டு லைட் எல்லாம் ஆப் செய்து விட்டு தான் மேட்டரை துவங்குவார்கள். வண்டி அதற்கான இடத்தை நோக்கி தான் நகர்ந்து கொண்டிருந்தது.

   அவளது வாழ்வில் இதற்கு முன்பாக இவனைபோலொரு அக்கறையான ஆண்மகனை பார்த்ததேயில்லை. தன்னை சாதாரண ஜீவனாக நினைத்ததை வைத்து அவள் சிலிர்த்தாள்.பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் கலை ஒழுகும் முகம்,முப்பது வயதை ஒத்த உடல் வாகு, இறுகிய மார்பு என பார்க்க சுமாரான ஆம்பளையானாகத்தான்  அவளுக்குத்  தெரிந்தான். அதற்கும் மேலாக தன் மீது அவன் காட்டும் பரிவையும், சக மனுசியை போல நடத்துவதை தான் அதீதமாக நேசித்தாள். இதற்கு முன்பாக இப்படியொரு அன்பை அவள் பெற்றதேயில்லை என்பது தான் அதற்கு காரணம்.

   வண்டி ஓட்டிக் கொண்டே கார் கண்ணாடியை இறக்கிவிட்டு சிகிரெட்டை பற்ற வைத்தான். இரண்டு இழுப்பு இழுத்த பிற்பாடு அவள் , அவனிடமிருந்த சிகிரெட்டை வாங்கி புகைத்தாள்.
அவள் சிகிரெட்டை விரல்களுக்குள் சிக்கவிட்டு புகைத்த விதம் பழக்கப்பட்டவர்களை போலே இருந்தது.
    வந்த பாதையை மறந்து மீண்டும் யூடர்ன் போட்டு வண்டி திரும்பியது.
" ஏன் மேட்டர் பண்ண  வேணாமா? "
"இல்ல மூடுப் போயிருச்சு "
" ஓ..ஆமா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
"இல்லை ..ஏன் கட்டிக்க போறியா என்ன?"
" ஏன் கட்டிக்க மாட்டனா"
" ஓ அந்த ஆசை வேற இருக்கா உனக்கு? "
   இதை கேட்டதும் அவளது முகம் வெம்மிப்போனது. அவனை ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் வந்தவன் அவளை ஏற்றிய இடத்திலே வண்டியை நிறுத்தினான்.
     " இங்க வேணாம்,சிட்டிக்குள்ள விட்ரு நான் அப்படியே வீட்டுக்கு போறேன்."
        மீண்டும் வண்டி நகரத்தை நோக்கி நகர்ந்தது. கொஞ்ச நேரம் மௌனம் அங்கே இசையாகியிருந்தது. சப்தங்களற்ற மௌனத்தின் இசையை கலைக்க இருவராலும் முடியவில்லை.
     " நான் கூப்புட்டா ஏன் கூட வந்துருவியா? "
      "வரமாட்டேன்,எப்படி பார்த்தாலும் எல்லா ஆம்பளங்களும் ஒண்ணு தான?"
     " ஹே... நான் சீரியசா கேக்குறேன்,ஏன் கூட வீட்டுக்கு வந்துட்றயா?"
      " உண்மையாவா? "
     " ஆமா நாளைக்கு இதே டைம் உன்ன பிக்கப் பண்ண இடத்துலயே வந்து நில்லு, நான் வந்துட்றேன்"
      அவள் எதுவும் பேசவில்லை. இருவருக்கிடையே பெரிய மௌனம் நிலவியது. பின்பு அவள் தலையை மட்டும் அசைத்தாள். அவன் மீது முழுமையாக நம்பிக்கை இல்லை என்றாலும் மனிதர்களுக்குள் ஒழிந்திருக்கும் அற்ப ஆசைகள் யாரைத்தான் விட்டது.
மறு நாள் அதே இரவில், அதே நேரத்தில், அதே இடத்தில் மழைத்துளிகள் மண்ணில் தாளமிட்டுக் கொண்டிருந்தன. அவள் பழைய நைலான் சேலையை உடுத்தி வந்து நின்றிருந்தாள். அவன் எப்படியும் வருவான் எனும் நம்பிக்கையில் காத்திருந்தாள்.
   என்றுமில்லாத அவளது முகத்தில் மஞ்சள் தேய்த்து குளித்த பிரகாசம் மிளிர்ந்தது. மாரியம்மனை போல் அந்த இருளிலும் அவள் ஒளியாய் தெரிந்தாள். சில கார்கள் அவளருகே பேரம் பேச முற்பட்டு அவள் மறுத்ததால் நகர்ந்து கொண்டிருந்தன.
        அந்த சாலையின் இன்னொரு மூலையில் புளியமரத்தின் பின்பே ஒளிந்து கொண்டு அவன்,அவளை கவனித்தான்.அந்த மஞ்சள் பூசியவளின் கண்கள் நிலை வெளிச்சத்தில் கண்ணீர் துளிகளோடு மிதந்தன. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தவன் அங்கிருந்து புறப்பட்டான்.விடியல் வரை காத்திருந்த அவள் விழிகளை சுற்றி கருமை படிந்திருந்தது. இரவிலிருந்து நின்றிருக்கும் அவளை எப்படியேனும் 100ஆண்களாவது மேட்டருக்கு அழைத்திருக்கலாம். நேரம் ஆக ,ஆக நெஞ்சு அடைப்பது போல துக்கம்  வந்தாலும் கட்டுபடுத்துக் கொண்டு எப்படியும் வந்து விடுவானென காத்திருந்தாள்.இருள் விலகி சூரிய ஒளி மெல்ல பூமியை விடியலுக்கு கூட்டிச்சென்றது.ஆனால் அவளுக்கான ஒளியை எந்த சூரியனும் தந்து விடப்போவதில்லை என அவளுக்கு தோன்றியது.
     
    
     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...