முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல் மோதிரமும், தந்தட்டியும் -சிறுகதை

              


   ஊருக்கு ஒதுக்கு புறமாக, இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட மக்கள் கூட்டம், மொத்தமும், ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். சுற்றி திராட்சை தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தார் போல், நெளிந்து ஓடும் ஒரு பாலடைந்த ஓடையை ஒட்டித்தான் ராமுத்தாயி கிழவியின் வீடு. அவரது கணவர் பேய்காமனுக்கு , ஓடையை ஒட்டி, ஒரு 5 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் ஒரு பாதி தென்னையும், மற்ற இடங்களில், வாழையும், ஆங்காங்கே தரை வெள்ளாமைகளும் பயிரப்பட்டிருந்தன. ராமுத்தாயிக்கு, சிங்கமுத்து, கட்டையன் என இரண்டு மகன்களும், காமாட்சி என்ற ஒரு மகளும் உண்டுஇவர்கள் இருவருக்கும் வேறு ஒரு ஊரிலிருந்த நிலத்தை பங்கு பிரித்து கொடுத்து விட்டு, மீதம் இருக்கும் நிலம் மனைவி ராமுத்தாயிக்கு தான் சொந்தம் எனவும், அவள் இல்லாத காலத்தில், மகள் காமாட்சிக்கு பங்குண்டு என எழுதி வைத்துவிட்டு, ஒரு சிறிய விபத்தில் அவர் போய் சேர்ந்துவிட்டார்.

இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும், ஒரு பைக்கில் வர, அவர்களை மரித்து சென்ற மாடுகளை ஹாரன் அடித்து நகர்த்தி கொண்டே வந்தார். அங்கே போலீஸ் வருவதை கூட யாரும் பொருட்படுத்தாமல், தங்களுக்குள் நடந்த சம்பவத்தை பற்றி பொறணி பேசிக் கொண்டிருந்தனர். சுற்றி வேலி அமைக்கப்பட்ட அந்த ஓட்டு வீட்டுக்கு முன்பாக வண்டியை நிறுத்திய இன்ஸ்பெக்டர் வேலியின் வாசலின் அமர்ந்திருந்த கிழவியின் மகன்களை பார்த்தார். இருவரும் நாற்காலி போட்டு அமர்ந்து சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இளைய மகளான காமாட்சி, கொட்டத்தில் கட்டி வைத்திருந்த மாடுகளை புண்ணாக்கு கரைத்தவாரே இன்ஸ்பெக்டரை பார்த்தார். இன்ஸ்பெக்டர் பாத்த மாத்திரத்திலே அது தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த, புளியங்கா காமாட்சி என தெரிந்து கொண்டார். அவளுக்கு இவரை பார்த்து புன்னகை செய்ய வேண்டுமென தோன்றினாலும், அந்த சூழல் பல்லை காட்ட தோதுவான இடமாகபடவில்லை.

இன்ஸ்பெக்டர் முத்துசாமி, கான்ஸ்டபிளிடம்யோவ்.. இவங்கள பூராம் பத்தி விடுயா..வந்துட்டாங்க.. எப்ப எவேன் குடிய கெடுக்கலாம்னு

உடைந்திருந்த மரக்கதவின் தாப்பாளை பார்த்த முத்துசாமி, அதனை தன் போனில் படமெடுத்து கொண்டார். பின்னர் மெதுவாக உள்ளே செல்ல, அந்த சிறிய வீட்டில், பாத்திரங்கள் எல்லாம் சிதறி கிடந்திருந்தன. கிழவி கட்டிலுக்கு கீழே, பிணமாக கிடந்தாள். கயிற்று கட்டிலின் ஒரு காலால், அவளது நெஞ்சை நசிக்கியிருக்கிறார்கள். பின்னர் கிழவியின் கழுத்திலிருந்து ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. பீரோவிலிருந்து துணிகள் எல்லாம் சிதறி கிடந்தன. விறகடுப்பில் சோற்று பருக்கைகள் சிதற, அந்த பாத்திரம் நெளிந்திருந்தது. முத்துசாமி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் போனில் போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் கான்ஸ்டபிளிடம்,

போரின்ஸிக்கு சொல்லிட்டியா..”

அய்யா வராங்கயா..”

அப்டியே ஆம்புலன்ஸ்கு சொல்லிரு…”

சரியா

என்றவாரே இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு பின்புறமாக இருந்த கிணற்று பக்கமாக ஓடினார். அங்கே அவரை செடிகள் பயிரடப்பட்ட பாத்தியில், நிறைய கால்தடங்கள் தென்பட்டன. குறிப்பாக அந்த ஒற்றை பாத்தியில் மட்டும் நிறைய கால்தடங்கள் இருந்தன. அப்போது அங்கு வந்த சிங்கமுத்து, தன் லுங்கியை இறக்கி விட்டு, முத்துசாமியை பார்த்து வணக்கம் வைத்தான். முத்துசாமி, தன் பாக்கெட்டிலிருந்த ஹான்ஸ் பாக்கெட்டை எடுத்து சிறிது உதட்டோரத்தில் வைத்து கொண்டான்.

யாரு இத மொதல பாத்தா?”

அய்யா.. நம்ம வீட்டுக்கு பால் கறக்க வர பய தான். எப்பவும் வந்து கத்துனா கிழவி வந்துரும். இன்னைக்கு வரலேயேனு அவனுக்கு ஒரு சந்தேகம். ஜன்னல் வழி எட்டிப்பாத்திருக்கான் கிழவி பிணமா கிடக்கிண்ணுட்டு பதறி போய் எனக்கு போன் அடிச்சான். நானும், தம்பியும் ஓடனே ஓடி வந்து பாத்தம்யா.. எங்களுக்கு ஈரக்கொலையே நடுங்கி போச்சு”  என்றவாரே தன் துண்டை எடுத்து நெஞ்சிலிருந்த ஈரத்தை துடைத்து கொண்டான்.

உங்க ஆத்தாவ கடைசியா நீ எப்ப பாத்த..”

நேத்துசாயங்காலம், இங்கிட்டு வண்டியில போறப்ப, தேங்காய் இறக்கிற பாத்துகிட்டு இருந்துச்சுயா.. நான் வண்டிய நிறுத்தி பேசுனேன். எத்தன காய் இறங்குனீகனு விசாரிச்சுட்டு வந்தேங்கயா.. அதான் நான் கடைசியா பாத்தது.”

சரி நீ போஉன் தங்கச்சிய வர சொல்லு…”

அப்போது அங்கு வந்த கான்ஸ்டபீள்ஐயா.. பவுடர் போட்றவங்க வந்துடாங்கயா”  என்றதும், முத்துசாமி அவரை குழப்பமாக பார்க்க,

அதாங்கயா.. போரீன்சிங்கு..” என்றதும் முத்துசாமிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்நேரம் பார்த்து, காமாட்சி அங்கு வர, இருவரும் தங்கள் சிரிப்பை அடக்கி கொண்டனர்.

நீங்க கடைசியா.. உங்க ஆத்தாகிட்ட எப்ப பேசுனீக.?”

நேத்து நைட்டு தான் போன்ல கூப்பிட்டுச்சு, தேங்காய் இறக்கிருக்கேன்எண்ணைக்கு வேணா வந்து மருமகன எடுத்துட்டு போக சொல்லிச்சு.. நான் கூட ஆடிக்கு வீட்டுக்கு வரேனு சொன்னேன்…” காமாட்சியின் தொண்டை அடைத்தது. அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. சேலை முந்தானையால் மூக்கு சளியை சிந்திக் கொண்டாள். “சரி போங்கஎன முத்து சொன்னதும், அவனை தன் முட்டை கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

யோவ்.. இது எவேன் வேலையாயா இருக்கும்சம்பவமே புதுசா இருக்கேயா.. கிழவி பீரோவுல பத்தரத்த தவிர ஒண்ணுமில்ல.. காதில தந்தட்டியும், விரல்ல, ஒரு கல்லு மோதிரத்த தவிர ஒண்ணுமேயில்லயே.. இத அடிச்சுட்டு போகவாஇவங்க வந்தாங்க.. அதுவும், காத கீத அக்காம.. நேக்கா தந்தட்டிய கழட்டிட்டு போயிருக்காங்களேயா.. வீட்டை ஒடச்சு உள்ள வந்திருக்காங்கனா..வேற எதோ பெருசா அடிக்க தான்யா பிளான் போட்டிருக்காங்க

எனக்கு அப்படித்தான்யா.. தோணுச்சு.. ஒரு தந்தட்டிக்காக கிழவிய கொல்லுற குருப்பு நம்ம லிஸ்டிலயே இல்லையே..”

சரி.. இரண்டாவது ஆளு கட்டையன கூப்புடு.”

அவன் கிட்ட பேசுனா.. நமக்கு தான்யா கிறுக்கு பிடிக்கும்.. சரியான திக்குவாய் அவனுக்கு.. அவன் என்ன பேசுறானே அவனுக்கும், நமக்கும் புரியாது.. இதுலே கஞ்சாவ அடிச்சுட்டானா ஆளு முழு ஊமை ஆகிருவான்

இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு முன்பாக வர, போரீன்ஸ்சிக் தடயங்களை சேகரித்து கொண்டு வெளியே வந்தனர்.

பெருசா பிங்கர் பிரிண்ட்ஸும் மாட்டலஆனா வீட்டுக்குள்ள நிறைய சாணி நாத்தம் அடிக்கிது.. பிளட் சாம்பிள் எடுத்திருக்கோம். நாங்க செக் பண்ணிட்டு ரிப்போட் அனுப்புறோம்என அவர்கள் கிளம்ப, அந்நேரம் பார்த்து ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. பாடியை வெளியே எடுத்து கொண்டு வர, காமாட்சி தன் தாயை இமை மூடாமல் நிலைகுத்தி பார்த்த வண்ணமிருந்தாள். ஊரிலிந்த சில கிழவிகள், தலையை விரித்து போட்டு, திடீரென ஒப்பாரி பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு பின்பு முத்துசாமியும், கான்ஸ்டபிளும் போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே உள்ள பெட்டி கடையில் இறங்க, அப்போது கடைக்காரன் அவருக்கு வணக்கம் வைக்கிறான். அவர் கண்டுகொள்ளாதது போல், பாக்கெட்டிலிருந்து சிக்ரெட் ஒன்றை எடுத்து பற்ற வைக்கிறார். அப்போது கண்ணாடி ஜாடியிலிருந்து பிஸ்கெட்டை எடுத்த, கான்ஸ்டபிளிடம், அவர் ஏன் கோபமாக இருக்கிறார் என கடைக்காரன் சைகையில் கேட்க,

அதொண்ணுமில்லடா, ஒத்த வீட்ல கிழவி செத்துச்சுல.. அந்த கேசு விசயமா தான் கொஞ்சம் டென்சனா இருக்காரு.. சம்பவம் புதுசா இருக்கு.. யாரு இத பண்ணிருப்பாங்கனு கணிக்க முடியல

கடைக்காரன் புன்னகையுடன்என்னா சார்.. இருக்கவே இருக்காரு.. நம்ம ரைட்டர் கருப்பசாமி ஐயா.. அவருக்கு தெரியாத வரலாறா.. சம்பவம் எப்டி நடந்திருக்குனு அவருக்கு சொன்னிங்கனா.. ஆளு யாரா இருக்கும்னு அவரு கணுச்சு சொல்லிருவார்ல

அது யார்யா கருப்பசாமி

சார் நீங்க இந்த ஸ்டேசனுக்கு புதுசு. நம்ம ஸ்டேசன்ல, 20 வருசத்துக்கு மேல வேல பாத்த கருப்பசாமி இப்ப ரிட்டேர்ட் ஆகிட்டு, பொழுது போகாம ஒரு பெட்டி கடை வச்சு உக்காந்திருக்காரு.. எதாச்சும் திருட்டு கேசோ, கொலை கேசோஅவர பிடிச்சும்னா ஆளு யாரா இருக்குமுனு யுகிச்சு சொல்லிருவாரு..”

முத்துசாமி உடனே சிக்ரெட்டை போட்டுவிட்டு, “அவர ஸ்டேசனுக்கு வர சொல்லு.” என கூறிக்கொண்டே பைக்கில் ஏற

டீக்கடைக்காரர்சார் டீயிட்டியில இருக்க வரைக்கும் தான் அவர் நம்ம சொல்றத கேட்டாரு.. இப்ப அவரு சொல்றதே தான் நம்ம கேக்கணும்என சிரிக்க, முத்துசாமி புரிந்து கொண்டதை போல் தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்தான்.

கருப்பசாமியின் பெட்டிக்கடை முன்பாக ஒரு ஈ காக்காய் கூடயில்லை. காலையில், வேலைக்கு போனால் மாலை தான் வீடு வந்து சேரும் அந்த கிராமத்து மக்கள் வாழும் ஊரில், இவர் யாருக்காக நாள் முழுதும் கடையை திறந்து வைத்திருக்கிறார் என முத்துசாமிக்கு சந்தேகம் எழுந்ததுஅவர்கள் இருவரும் கடையின் முன்னாடி நிற்ககருப்பசாமி கான்ஸ்டபிளை அடையாளம் கண்டு கொண்டு,

ராசாத்தி கொஞ்சம் தண்ணி கொண்டாமா..” என்றவாரே தன் பழைய கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். கருத்த உடலும், முழுக்க நரை ஏறிய பழுத்த தலையும், இரண்டு பக்க காதுகளிலும், அடர்ந்திருந்த நரை முடியும், உப்பிய வயிரும், தொங்கிய மார்பும் தான் அவரது அடையாளங்கள். கண்ணாடி வழியாக இன்ஸ்பெக்டரை உற்று பார்த்த கருப்பசாமி கான்ஸ்டபிளிடம்

என்ன நம்ம ஸ்டேசனுக்கு எப்பவும், வெளி மாவட்டத்துகாரனதே இன்ஸா போடுவாக.. இவர பாத்தா நம்ம ஊரூ மூஞ்சி மாதிரி தெரியுது

ஆமாங்கயா.. நான் அணைப்பட்டிகாரன் தான்.”

சரி ரைட்டு வந்த விவரத்த சொல்லுங்க

கான்ஸ்டபிள் கேஸ் பைலை, ரைட்டரிடம் கொடுக்க, ரைட்டர் அதனை கொஞ்சம் நேரம் ஆழமாக வாசித்து கொண்டிருந்தார். இடை இடையே வரும் , வாடிக்கையாளர்களுக்கு, மளிகை சாமன்களை கொடுத்தவாரே கேஸ் பைலை முழுவதுமாக வாசித்தார்.

சம்பவ இடத்தில எடுத்த போட்டோ எதும் வச்சிருக்கீங்களா?” என்றதும்

முத்து, தன் போனிலிருக்கும் போட்டோவை காட்டுகிறான். அப்போது பார்த்து, கருப்பசாமியின் மனைவி டீ கொண்டுவர, மூவரும் அமைதியாக டீ குடிக்கிறார்கள்.

பின்னர் லேசான செருமலுடன்இதுல போஸ்ட் மாடம் ரிப்போர்ட் இல்ல.. ரிப்போர்ட் படி என்ன சொல்றாக

ஐயா.. கழுத்துல கட்டை விரல வச்சு அழுத்தி, சங்குல ஓட்டை போட்டிருங்காங்க.. அதுக்கு முன்னுக்க கொஞ்சம் தள்ளுமுள்ளு நடந்ததுல, கிழவி உடம்புல அங்க அங்க கீறல் இருக்கு. மேற்கொண்டு, கட்டிலுக்கு கீழ போட்டு, கட்டிலு காலல நெஞ்ச அழுத்தி பிடிச்சுகிட்டுதே தந்தட்டிய கழட்டிருக்காங்க.. கல்லு மோதிரமும், கழட்டும் போதும் கைவிரல உடைஞ்சிருக்காங்க

டீ கிளாசை கீழே வைத்த அவர், கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டு விரலை காற்றில் பரப்புகிறார்

நம்ம வட்டாரத்துல, திருட்ட தலைமுற, தலைமுறயா பண்ணுற பல குருப்புக இருக்கு.. இதுல முக்கியமாக அந்த ஊரை சுத்தி பார்த்தம்னா ஒரே குடும்பம் தான். மூக்கையா குடும்பம். மூக்கையா அந்த காலத்துல, நைட்டோட நைட்டா ஆட்ட களவாண்டுக்கு போய், கறியாக்கி, அந்த ஊருக்கே விக்கிற ஆளு. மந்தையில ஆட்ட தூக்கிறப்ப கத்துச்சுனா உடனே கழுத்த திருகி கொன்டு புடுவாங்கயாருவீட்டு ஆடு, யார் வீட்டு கறினு தெரியாமா, ஒன்னுமொண்ணா  கலந்து கறிகடை காரணுக்கு வித்திருவாங்க.. அவேன் தம்பி ஒருத்தேன் இருக்கா.. அவன் இந்த மோட்டரு, பம்பு செட்டுக இதுகல களவாண்டுறதுல கிள்ளாடி. அவனுக்கு நைட்ட விட பகல்ல திருட்றதுதே ரொம்ப பிடிக்கும். மத்தியான நேரத்துல கயித்த கட்டி கிணத்துல இறங்கி அரவில்லாம மோட்டார கழட்டி மேல ஏத்திருவான். பிறகு அத சாக்க சுத்தி சைக்கிள்ல கட்டி, எதோ புண்ணாக்கு மூடை கொண்டு போறாப்புல ஊருக்குள்ளயே போவான்

இடையில் ஒரு சிறுமி வந்து மிட்டாய் கேட்டது. அதை எடுத்து கொடுத்துக்கொண்டே போச்சை தொடர்ந்தார்.

மூக்கையனுக்கு ரெண்டு ஆம்பள பயலுக, ஒருத்தேன் மிலிட்டிரிகாரேன்.. இவங்க சாவுகாசமே வேணாம்னுட்டு, தேனி பக்கமே வீட்ட கட்டி செட்டில் ஆகிட்டான். சின்னவேன் இசக்கி ஒண்ணா நம்பர் களவாணி பய, ஊர சுத்தி ஒரு உண்டியல விட்டு வைக்கிறதில்ல.. கோயில் கதவ, கடப்பாறைய வச்சு பேத்து எடுத்துட்டு, அப்டியே உண்டிய தூக்கிட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு எதாச்சும் கிணத்துல, உண்டியல தூக்கி போட்டிருவான். ஆனா இவங்க களவாண்டுறத யாராச்சும் பாத்துட்டா அவ்ளோ தேன்.. ஒரு வாட்டி அப்டிதே.. பூசாரி ஒருத்தர் உண்டியல் அடிக்கிறத பாத்துட்டு கத்திருக்காருஇழுத்து வச்சு நாக்க அறுத்துவிட்டான். அடிக்கடி மாட்டிகிட்டு ஜெயிலுக்கு வருவான். அப்பறம் ஒரு 6 மாசம் உள்ள இருந்துட்டு, இங்கயே நிறைய திருட்டு தனம் பண்ணுவான். ரிலீஸ் ஆகிட்டு போறப்ப. அவன் பாட்டுக்கு, லத்தி, போலீஸ் தொப்பினு என்னத்தையாவது களவாண்டுகிட்டு போயிருவான்.. அப்பறம் அவன தேடி பிடிச்சு மறுபடியும் வாங்கிட்டு வரணும்

இத்தனையும் எப்டியா நியாபகம் வச்சிருகீக?”

என்னா தம்பி 20 வருசம், எத்தனை கேச இந்த கைப்பட எழுதிருக்க மாட்டேன். அதுலயே ஊறி ஒவ்வோருத்தேன் வரலாறு மனசுல நச்சுனு பதிஞ்சு போச்சு. எனக்கு இந்த டீவி பாக்குற பழக்கமும் இல்ல. நியூஸ் பேப்பர்ல இருக்க ஒவ்வொரு செய்தியா நோண்டி நோண்டி வாசிப்பேன். வேற பொழுது போகணுமில

சரி பாய்ண்டுக்கு வாங்கஎன கான்ஸ்டபிள் பேச்சை திசை திருப்பினார்.

இப்ப இவங்க வம்சாவளியில இருக்கிறவங்க, இசங்க மகங்க இரட்டை பிறவி. ராமரு, லட்சுமணன். இரெண்டு பேரும் இங்கிலீஸ் படம் நிறைய பாக்குற ஆளுக, ரெட்டை பிறவினால ஒரே மாதிரி தே இருப்பாங்க.. இவன பிடிச்சா.. நான் பண்ணலம்பான். அவன பிடிச்சா நான் பண்ணலம்பான். இவங்க களவாணித்தனமெல்லா பெரிய லெவலாதான் இருக்கும். ஒருவாட்டி கூட்டுறவு பேங்குலயே கை வச்சுட்டாங்க.. அடிச்ச காச, ஒரு 6 மாசம் அந்த பேங்க்ல வேலை செய்ற ஒருத்தனுக்கே வட்டிக்கு குடுத்திருக்காங்க. அவன் சீரியல் நம்பர வச்சு ஆள புடிச்சுட்டான். அப்பறம் ஸ்டேசன்ல வச்சு அடி உரிச்சோம். இவன் மாட்டுனா.. இன்னொருந்தேன்.. நான் பண்ணலம்பா.. நானே பாவம் அப்டிங்கிற மாதிரி நடிப்பான். அவன அடிச்சா, எனக்கு தெரியாதும்பா.. இப்படி மாத்தி மாத்தி நம்மளயே சுத்த விடுவானுங்க

ஒருவேள இத கூட இவங்க பண்ணிருக்க வாய்ப்பிருக்கா

நிச்சயமா இல்ல.. ஸ்கெட்சு போட்டு களவாணி தனம் பண்றவேன் எவனும் கொலை செய்ய மாட்டேன். இது எவனோ புதுசா இறங்கிருக்கான். தொழில் பழக்கமில்லாத ஆளு.. அவன் தாழ்பாளை உடைச்சிருக்க விதத்துல தெரியல, கல்லெடுத்து அடிச்சு, படாத பாடு பட்டுத்தேன் தாப்பாள உடைச்சிருக்கான். அப்டி உடைக்கிறப்பதா.. ஊருக்குள்ள இருந்து கிழவி வந்திருச்சு. இது ஒரு 7-8 மணி வாக்குல நடந்திருக்கலாம். கிழவி வெளிய போற நேரம் பாத்து இறங்கி அடிக்கனும்னு அவன் கவனுச்சிருக்கான். அப்பன் நல்லா நோட்டம் விட்டுதே பண்ணிருக்காங்க. அவங்க நகைய திருட வந்த கும்பல் மாதிரி தெரியல.. வேற எதோ பெருசா திட்டம் போட்டு வந்திருக்காங்க. அது என்னனு கண்டுபிடிங்க..அப்பறம் ஆள புடிச்சிருலாம்என்றார்.

பின்னர் இவர்கள் இருவரும், கருப்பசாமியிடம் விடைபெற்று கொண்டு பைக்கில் ஏறி அமர, எதோ யோசித்தவராய் அங்கு வந்த கருப்பசாமி

தம்பி, எதுக்கும் குடும்பத்துக்குள்ள சொத்து பிரச்சனை எதும் இருக்கானு பாருங்க.. அந்த ஒத்த கிழவிக்கு அஞ்சு ஏக்கர் நிலமுனு சொல்லும் போதே எதோ இடிக்கிது.”

என்றதும் முத்துசாமி சரி என்பது போல் தலையை ஆட்டி விட்டு வண்டியை எடுத்தான். ஸ்டேசனில் கரண்ட் கட் ஆகியிருந்ததால்ஊழியர்கள் எல்லோரும், வெளியே நின்று அரட்டை அடித்தவண்ணமிருந்தனர். முத்துசாமியை பார்த்ததும், மற்றொரு கான்ஸ்டபிள்சார்.. ஒத்த விட்டு கிழவியோட பசங்க ரெண்டு பேரும் வந்திருந்தாங்க.. கிழவிகிட்ட இருந்த நிலப்பத்தரம் எல்லாம் காணாம்போயிருக்குனு வந்து எழுதி குடுத்துட்டு போயிருக்காங்கயா

அப்போது தான் முத்துசாமிக்கு லேசாக பொறி தட்டியது. பத்திரத்தை திருடத்தான் ஆட்கள் வீட்டில் இறங்கியிருக்கிறார்கள். என தெரிய வந்தது. ஆனால் அது கிழவியின் மகன்களுக்கு தானே அவசியம். அதை ஏன் இவர்கள் திருட சொல்ல வேண்டும் என தோன்றியதும், அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பின்னர் அவன் கிழவியின் தோப்பில் பண்ணைக்கு வேலை செய்யும் ஆட்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தார். விசாரணையில், தற்போது கிழவிக்கு சொந்தமான நிலத்தில், ஒரு நல்ல ஊத்தெடுக்கும் கிணறு இருப்பதாகவும், அந்த கிணறு எல்லோருக்கும் பொதுவான கிணறு எனவும் எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து தான் மகன்கள் இருவரும், குழாய் போட்டு தங்கள் தோட்டத்திற்கு நீரை எடுத்து செல்கிறார்கள் எனவும், இது காமாட்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் காமாட்சிக்கும் கிழவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. தான் இல்லாத காலத்தில் மகன்கள், வரண்ட நிலத்தில், நீரிலில்லாமல் சிரமப்பட்டுவிட கூடாது என்பதற்காக, அந்த கிணறை எல்லோருக்கும் பொதுவாக பேய்க்காமன் எழுதி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த நிலத்திலுள்ள கிணறு தனக்கு மட்டும் தான் சொந்தம் எனவும், தன் அண்ணன்கள் தோட்டத்திற்கு எடுத்து செல்லும் நீரை வேறு யாருக்காவது விற்றால், பெருத்த லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அடிக்கடி காமாட்சி, தன் தாயுடன் சண்டையிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பின்னர் காமாட்சியின் கணவர், சம்பவம் நடந்த அன்று தனது சொந்த வீட்டில் இல்லை எனவும், தோட்டத்தில் நீர் பாய்ச சென்று விட்டதாகவும், கான்ஸ்டபிள் விசாரித்துவிட்டு கூற, இருவரும் உடனடியாக காமாட்சியின் கணவரது நிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கே பாத்தியில், நீர் பாய்ச்சியதற்கான ஈரப்பதமே சுத்தமாக இல்லை. உடனே சந்தேகத்தின் பேரில் கணவர், மனைவி இருவரையும், போலீஸ் ஸ்டேசனுக்கு வர சொன்ன முத்துசாமி அவர்களிடம், பொதுவாக விசாரிப்பதை போல் விசாரணையை தொடங்கினார்.

அன்னைக்கு நீங்க.. கிழவிய பாக்க வீட்டுக்கு போயிறுகீங்க?”

உடனே காமாட்சி கோபமாகசார் அவர் நைட்டு எங்க தோட்டத்துக்கு தான் போனாரு. ஏன் சார் இப்டி பைத்தியகாரதனமா எங்க மேல சந்தேகபட்றீங்க, கேச ஒழுங்கா விசாரிக்க துப்பில்லனா இஷ்டத்துக்கு பழிய போடுவீங்களாஎன்றாள்.

ம்மாஇருமாநீ ஏன் இவ்ளோ கோவப்பட்டுற? தப்பு செஞ்சவரே கம்முனு கூலா உக்காந்திருக்காரு.. தூண்டிவிட்ட உனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருதுஎன்றவாரேஒரு கவரை தூக்கி போட பீடி துண்டு, காமாட்சி கணவரின் சட்டையிலிருந்து கிழிந்தெடுத்த சிறிய நூல், இவையெல்லாம் இருந்தது.

 “போஸ்ட்மாடத்துல என்னடா கெழவி உடம்புல மருந்து வாடை அடிக்கிதேனு பாத்தா.. நீங்க புத்திசாலிதனமா மருந்தடிக்கிற உறைய கையில போட்டு உள்ள போயிருக்கீங்கஊருக்குள்ள  போயிருக்க கிழவி வர எட்டு மணி ஆகும்னு தெரிஞ்சு அதுக்கு முன்னாடியே கிணத்து மேட்டு பக்கத்துல நின்னு பீடியா குடிச்சு தள்ளிருக்கீங்க.. பிறகு பதட்டம் தனிஞ்சதா நீங்களே நினைச்சுகிட்டு கையில குளோவ்ஸ் எல்லாம் மாட்டிகிட்டு தாழ்பாளை நெளிச்சி பாத்திருகீங்க, நெளியலனு தெரிஞ்சதும், கீழ கிடந்த கல்லெடுத்து உடைச்சி உள்ள போயி பீரோவ திறந்து பத்திரத்தை எடுக்கலாம்னு பாத்திருக்கீங்க.. அத எடுத்து ஆதாரத்தை அழுச்சு, மறுபடியும் கிழவிய வச்சு பத்தரத்தை எழுதலாம்னு திட்டம் போட்டுறுகீங்க.. இல்லனா புதுசா ஒன்ன எழுதி வைச்சுட்டு கிழவிய மிரட்டி கைநாட்டு வாங்கலாம்னு திட்டம் போட்டிருகீங்க. ஆனா. அந்த நேரம் பாத்து எதர்ச்சையா கிழவி வீட்டுக்கு வர, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்து, சண்டை முத்தி, கிழவிய போட்டு தள்ளிருகீங்கபிறகு பத்திரத்த எடுத்துட்டு போகும் போது, திருடங்க வந்துட்டு போன மாதிரி இருக்கனுங்கிறதுக்காக, கிழவி தந்தட்டியும், மோதிரமும் திருடிட்டு போயிருக்கீங்க.. அத கிழவி மகளுக்கு அன்பு பரிசா குடுத்திருகீங்க.. அதான

என சொல்லி முடிக்க, எதிரே இருந்த காமாட்சி மற்றும் அவரது கணவரின் முகமும் வெளிறிப் போயிருந்தது. அந்நேரம் பார்த்து அங்கு வந்த டீக்கடைகாரன்சார் டீ.. “ என டேபுளில் மூவருக்கும் டீயை வைக்கிறான்.

ஒரு டீக்கிளாஸை எடுத்து கொண்ட முத்துசாமி, காமாட்சியை பார்த்து

எடுத்துகோங்க..” எனக்கூற, அவள் பதட்டமாக டீக்கிளாஸை எடுத்து, அவனை பார்த்து கொண்டே உதட்டில் வைத்து ஒரு மிடர் பருக, சூடான டீயால் நாக்கு சுட்டுவிடுகிறது. உடனே அவள் பதற்றத்தில் டீயை வைக்கிறாள்.

சுடுதா.. ஒரு குத்தம் பண்ணும் போதும் மட்டும், முட்டாளுங்களுக்கு கூட மூளை எப்படியெல்லாம் வேலை செய்துள்ள.. இந்த உலகத்துல, கெட்டது பண்றதுக்கு தான், மனுசன் பல மடங்கு புத்திசாலிதனமா யோசிக்கிறான். நல்லது பண்ணனும்னா மட்டும் மூளை எங்கதா போகுமோஎன்றவாரு டீயை பருகி கொண்டே, காமாட்சியின் கணவரை பார்த்து,

சார்.. சூடு ஆறிட போது.. டீய எடுத்து குடிங்க.. இனி அடிக்கடி, இந்த டீதான் சாப்பிடற மாதிரி தான் இருக்கும் என புன்னகைத்தான்.


-சிபி சரவணன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...