அணிந்துரை
இலக்கிய வகைமையில் எனக்குப் பிடித்ததாக நான் நம்பியது கவிதைகளை தான் பிறகு அது எனக்கேற்ற வகைமையில்லை என்றுணரவே பத்தாண்டுகள் தேவைப்பட்டது. புதிதாக ஒரு புதினத்தை கண்டால் எனக்கு ஒரு புதிய உலகுகினுள் நுழைகிற உணர்வே ஏற்படுகிறது. ஒரு நல்ல புதினம் நம் மேல் ஒரு பிடித்த உடை போல உடலோடு ஒன்றிணைந்துவிடுகிறது. சில புதினங்கள் மனதோடு…அந்த வகையில் “அஞர்” என்னை கலங்க வைத்துவிட்டது.
தமிழில் புதினமென்ற வடிவில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது ஆனால் அவையெல்லாம் புதினங்களா என்று கேட்டால் நான் நிச்சயம் சில கணங்களாவது பதிலற்று திகைத்து நிற்பேன். “அஞர்” ஒரு சிறந்த புதினம் இதை சாதித்த சிபி சரவணனுக்கு நம் வாழ்த்துக்கள்.
தென்மேற்கின் வட்டார மொழியுடன் அந்த நிலத்தின் அழகை கதையோடு பேசுவது உணர்ச்சிமிக்க இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இந்த புதினத்தை வாசித்து முடித்தவுடன் துயரில் நெஞ்சு அடைத்துக்கொண்டு கண் கலங்கிய பொழுதில் இப்படி தோன்றியது.
“பிறகு அங்கிருந்து அத்தனையும் காணாமல் போயிருந்தது. ஆனால் அங்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தூய காதல் மட்டும் தேங்கியிருந்தது. அது இன்னும் ஆவியாகமலும், அழிந்து போகாமலும் அப்படியே அதே உயிர்ப்புடன் ததும்பியபடி…”
மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள சமவெளியின் வட்டார மொழி, கட்டிட தொழிலாளிகளின் உளவியல், மண்வாசனை, மலைக்கு மேலே உள்ள நிலம் குறித்த கடந்தகால அரசியல், ஏலக்காயின் மணம், அங்கு நிலவும் வாழ்வியல் கட்டமைப்பு, காதல், சாதி, ஆணாதிக்க மற்றும் சாதிய முரண்பாடுகளென மிக யதார்த்தமாக பேசுகிற புதினம். ஊர் பெண், காலனி பையன் காதலிக்கிறார்கள் என்று தெரிந்து சாதி நோயர்கள் அந்த பையனை சித்திரவதை செய்து சிதைத்துக் கொல்கிறார்கள் அது ஊருக்கே தெரிந்திருக்கிறது ஆனால் போலீசுக்கு தெரிந்திருக்கவில்லை இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஊரிலும் கொல்லப்படுகிறார்கள் அந்த கொடூர சித்திரவதை கொலையை போகிறப்போக்கில் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
சடையாண்டி சொல்கிறான் தன் அன்புக்குரியவளிடம் “இந்த வாய்க்கா, இந்த மண்ணு, வயக்காடு, வானம், காக்கா, குருவிக, சாட்சியா சொல்றேன். நீ தான் எனக்கு ராணி, நான் தான் உனக்கு ராசா, இதுகதான் அதுக்கு சாட்சி இதுகளுக்கு உண்மையா நாம பிழைப்போம். மனுச பய மனசு பீ மனசு, நாளாக நாளாக நாறிக்கிட்டே தான் போகும். நான் உன் மேல வச்சிருக்கற பாசம் இந்த மண்ணுக்கு சமானம்” என்கிற உரையாடலும், காதல் பிரபஞ்சத்தின் கடைசி நம்பிக்கை என்ற வரியும் இந்த நாவலின் நியாயமாக இருக்கிறது.
காதலை பேச வேண்டும், அதன் வழியே சமூக நிலைகளை பேச வேண்டும், அதை உண்மையாக பேச வேண்டும், எழுத்தின் வழியே அதை அழகு குலையாமல் வடிக்க வேண்டும் என்கிற ஒழுங்கையெல்லாம் இந்த புதினத்தில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தன்னவளின் மீதான அநீதியான சந்தேகத்துக்கு பெயர் ராமன் என்று சொல்லக்கூடிய அளவு நுட்பமான வடிவெழுத்து.
வடிவான ஒரு எளியவள் இந்நிலத்தில் எவ்வளவு பாதுகாப்பற்றிருக்கிறாள் என்கிற அவலத்தை மிக அப்பட்டமாக பேசுகிற வேறொரு நாவலை நான் இதுவரை வாசித்ததில்லை. மனித மிருகங்களின் இந்த பண்பற்ற மனநிலைக்கு காரணம் என்ன என்கிற புறச்சூழலையோ, அகச்சூழலையோ புதினம் பேசாமல் யதார்த்தத்தில் ஒரு பெண் ஆண்களின் எண்ணத்தில் என்னவாக உணரப்படுகிறாள் அது அவளுக்கு எத்தனைப்பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது என்பதை மிகச் செப்பமாக பேசுகிற புதினம். எளிய மக்கள் பிழைப்பின் பொருட்டான பாடுகளை, தங்கள் உழைப்பின் களைப்பில், காதலின் கனிவில் எப்படி துய்கிறார்கள் என்று மிக இயல்பாக பேசுகிற ஒரு புதினம். தென் மேற்கு மலைத்தொடருக்கு அடியிலிருக்கும் சமவெளி வாழ்க்கை, மொழி, சாதிய நிலைப்பாடு அதை மீறி மனிதர்களுக்கிடையில் நிகழும் காதல் அதன் கொடூரமான விளைவுகள் என…
காதல் கனியின் இனிப்பும், இந்நிலத்தில் அது தரும் துயரைக் காட்டும் அழகிய சித்திரம்.
- கரன் கார்க்கி
எழுத்தாளர்
நூலை பெற தொடர்புக்கு: 9543339081
அமேசான் லிங்க்: Angnar - Tamil novel
https://amzn.eu/d/guH7Qjj
கருத்துகள்
கருத்துரையிடுக