கார் இன்னும் எங்கள் ஊரை நெருங்கி விடவில்லை. சாலைகள் ஒரு சீராக இல்லாததால் வண்டி குலுங்கியது. சென்னையில் பயணம் துவங்கிய போது குடித்த தேநீரின் கசப்பு இன்னும் நாவை வறட்சியாக்கியது. சேதி வந்ததும் முதலில் அது என் மனைவியின் மூலமாகவே எனக்குத் தகவல் தெரிய வந்தது. அவள் மிகவும் சலனப்படுவது போல் நடித்துக் கொண்டே என்னிடம் அதைச் சொன்னாள். இதற்கு முன்பாக அவள் கடைசியாக அப்படி நடித்தது எனக்கு ஞாபகம் இல்லை. பேருந்து பயணத்தை விட்டுக் குறையக் காலம் ஆகிவிட்டது. நல்ல வேலையும், வசதியும் கிட்டத்தட்ட என்னைச் சோம்பேறியாக ஆக்கிவிட்டது. பயணத்தினூடே காரின் ஓட்டுநர் அடிக்கடி பின் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவனுக்கும் சேதி தெரியும் என்பதால் என் முகம் எவ்வளவு சுருங்கிப் போய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் அவன் அவ்வாறு பார்க்கிறான் என எனக்குத் தெரிந்தும் நான் அவனோடு பேச்சு வளர்க்க விரும்பவில்லை. என்னிடம் கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் அவனுக்கு எனது எல்லா வகையான முகங்களும் தெரியும். பொறணிப் பேச்சில் பெயர் பெற்ற என் மனைவியின் புகார்களை அவன் காதுகள் அவ்வளவு கூர்மையாக உள்வாங்கிக் கொண்டு இருந்தாலும் அவன் வண்டி ஓட்டுவதில் மட்டும் எவ்வித சந்தேகங்களும் வராமல் நடந்துக் கொள்வான். பயணத்தினூடே அவன் மிகவும் சிரமப்பட்டு சிறுநீர் கழிக்கவேண்டுமென இரு முறை வண்டியை நிறுத்தினான். அதற்குப் பிறகு டீ சாப்பிடக் கூட அவன் கேட்கத் தயங்கியதை அறிந்து கொண்ட நான் இடையில் வண்டியை நிறுத்த சொல்லிச் சாப்பிட்டு விட்டு வரச் சொன்னேன். ஆனாலும் அவன் டீயை மட்டும் குடித்துவிட்டு என் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டான். எங்கள் ஊருக்கு முன்பாக ஒரு ஆலமரம் இருக்கிறது. அது எத்தனையோ தலைமுறை மனிதர்களின் கதைகளை தனக்குள்ளே வைத்திருக்கிறது. அம்மரத்தை சாமியாக வழிபடும் அதே மனிதர்கள் தான் மரத்தின் அடியே மீது அமர்ந்து சரக்கடிக்கவும், பெண்களைக் கற்பழித்து கொலை செய்யவும் தயங்கியதில்லை. எனக்கும் அந்த ஆலமரத்திற்கும் இடையே பேசிக்கொள்ள நிறைய கதைகள் இருக்கிறது. அதைப் பற்றி நினைக்கலாம் என்றாலும் இப்போது துக்கம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. வண்டி ஊருக்குள் நுழையும் போதே டீக்கடையில் நின்றிருந்த சிலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள் பேச்சில் என்ன இருக்கும் என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் துளியும் நல்லதை பற்றியதாக மட்டும் இருக்காது எனத் தோன்றியது. எனது வீட்டிற்குச் செல்லும் தெருவில் முன்பெல்லாம் கார் செல்ல முடியாது. ஆனால் இப்பொழுது வசதியாகவே சிமெண்ட் சாலை அமைத்து விட்டார்கள். தெருவை நெருங்க நெருங்க உறுமியின் சத்தம் காதுக்கு வந்தது. தெருவின் முக்கில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு நான் நடக்கத் தொடங்கினேன். என் வீட்டிற்கு முன்பாக சொந்த பந்தங்களும் ஊர்க்காரர்களும் குழுமியிருந்தார்கள் அவர்களது கண்களுக்கு நான் ஒரு புதிய மனிதனைப் போல் தெரிந்தேன். ஊர் பெருசுகள் சிலர் சேரில் வரிசையாக அமர்ந்து கொண்டு தரையே பார்த்துக் கொண்டு தங்களுக்கான நாளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தனர். வீட்டின் முன்பாக நான்கு பக்கமும் திரைச்சீலை கட்டப்பட்டு பெண்கள் அதனைச் சுற்றிலும் நின்றிருந்தார்கள். ஊர் வழக்கப்படி ஊரில் ஒர் இழவு விழுந்தால் அந்த தெருவை ஒட்டியுள்ள நான்கு தெருவில் யாரும் வேலைக்குப் போகக்கூடாது. மேலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு குடம் நீர் கொண்டு வந்து இறந்த உடலை குளிப்பாட்டக் கொடுக்க வேண்டும்/ அப்படி அங்கு நிறையப் பெண்கள் வண்ண வண்ண குடத்தோடு வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்களது முகத்தில் அன்றைக்கான கூலிப் போய்விட்டது என்பதை தாண்டி கொஞ்சம் துக்கமும் தெரியத்தான் செய்தது. சேலைக்குள்ளே அம்மாவின் உடலை ஒரு மரச்சேரியில் கிடத்தி ஒட்டுத் துணி இல்லாமல் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். நான் அவளது மகனாக இருந்தாலும் எனக்கு அதைப் பார்க்க அனுமதியில்லை. என் டிரைவர் பையைக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளே வைத்தான். எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. துக்கம் தொண்டையைக் கோடாரியால் கொத்திக் கொண்டிருப்பதை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் முழித்தேன். அப்போது ஒரு பெரியவர் என் சட்டையைக் கழட்டச் சொல்லி தோளில் ஒரு புது துண்டை போட்டுவிட்டு உட்கார வைத்தார். துக்கம் விசாரிக்க வரும் ஒவ்வொருவரும் என் உள்ளங்கையில் தங்கள் கைகளை வைத்து அழுத்தமாகப் பிடித்து விட்டு பின்பு எதுவும் சொல்லாமல் போய் அமர்ந்து கொண்டனர். அம்மாவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் இடையில் தலையில் எண்ணெய் வைக்க என்னை அழைத்தார்கள். நான் உள்ளே சென்று பார்க்கையில் அம்மாவின் உடலை ஒரு பழைய புடவையால் போர்த்தியிருந்தார்கள். நான் அவளது தலைப்பக்கமாகச் சென்று ரொம்ப நாளாக நான் பார்க்காத அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். கன்னங்கள் இரண்டும் ஒடுங்கிப் போய் வாய் ஒட்டி காணப்பட்ட அவளது கருமையான தோலில் ஒரு வித வெறுப்பு தெரிந்தது. நான் அங்கிருந்த நல்லெண்ணெய்யை எடுத்து அவளது தலையில் தடவினேன். தலையில் கை வைத்ததும் எலும்பு துருத்திக் கொண்டிருப்பதை என் உள்ளங்கையில் உணர முடிந்தது. எனக்கு உடல் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. நிறைய நேரம் வாகனத்திந் ஏசியில் உட்கார்ந்து வந்திருக்கும் அதற்கும் சளி பிடித்து மூச்சை அடைப்பது போல் ஒரு உணர்வு. நான் வெடுக்கெனக் கையை எடுத்துக் கொண்டு போய் அதே நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். கால்கள் சில்லிடத் துவங்கியதும் மனம் நினைவுகளில் ஆழ்ந்தது. அம்மாவை கடைசியாக நான் பார்த்தது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகவாவது இருக்கும் அப்போதெல்லாம் அம்மா என் மனைவியைப் பற்றிக் குறை கூறுவாள். மனைவியும் பதிலுக்கு என் அம்மாவைப் பற்றி புகார் சொல்வாள். கிட்டத்தட்ட இவர்களை சமாளிப்பதற்குள்ளே என் ஒவ்வொரு விடுமுறை பொழுதும் நரகமாக மாறிப்போய்விடும். கல்யாணம் ஆகி இரண்டு வருடத்தில் ஒரு குழந்தையை விட்டு,விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றேன். ஒவ்வொருமுறை விடுப்பில் வரும் போதும் மாமியாருக்கு மருமகளுக்கும் இடையே சண்டை உக்கிரத்தில் இருக்கும். அவர்களை சமாதானப்படுத்தி இருவருக்கும் நல்ல பிள்ளையாக இருந்துவிட்டு திரும்பச் சென்று விடுவேன். ஆனால் போர் ஒரு கட்டத்தில் முற்றிப்போய் என் முன்னாலேயே என் மனைவியை அம்மா திட்டத் துவங்கிய போது கோபத்தில் அம்மாவை பளார் என ஒரு அறை விட்டேன். அன்று அவள் என்னை பிரம்மை பிடித்தது போல் ஒரு பார்வை பார்த்தாள். அதோடு சரி இப்போது வரை அவள் என்னோடு பேசவில்லை. நானும் ஒரு சில மாதங்களில் என் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு சென்னையில் சொந்தமாகத் தொழிலைத் தொடங்கி என் மனைவியையும். குழந்தைகளையும் அங்கே கூட்டிச் சென்றுவிட்டேன். ஒவ்வொருமுறை அம்மாவோடு பேச வேண்டுமென நினைத்தாலும் ஏனோ ஒரு கர்வம் அதைத் தடுத்தது. அம்மாவும் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. மின்சார வாரியத்தில் பணியாற்றிய அப்பாவின் பென்ஷன் பணத்தில் அவள் காலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஊருக்குப் போகலாம் என பேச்சு எடுக்கும் போதெல்லாம் மனைவி ஏதாவது ஒன்றைச் சொல்லி தடுத்து விடுவாள். அவ்வப்போது நண்பர்களோடு அழைத்துப் பேசி அம்மாவை பற்றி நலம் விசாரித்துக் கொள்வேன். காலம் மேகமாய் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தாலும் அவளை அறைந்த அன்று அவள் என்னைப் பார்த்த பார்வை அந்த கண்களில் இருந்த கோபம் எல்லாம் இன்னும் மறக்க முடியாது. நேற்று இரவு அவள் இறந்துவிட்ட செய்தியை கேட்ட பின்பு கூட என் மனைவி ஊருக்கு வர மறுத்துவிட்டாள் அப்பா வழி சொந்த பந்தம் எதுவுமே இனி என் மகனுக்கு தேவை இல்லை என அவள் சொன்னதில் எவ்வளவு விஷமம் நிறைந்திருந்தது. ஒருபுறம் தேரை கொண்டு வந்து நிறுத்தி அதற்குச் சுற்றிலும் பூ அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். துருப்பிடித்திருக்கும் அதன் மேனியை நீரால் கழுவியதும் கருமையாக பார்க்கவே அச்சுறுத்தும் வகையில் இருந்தது. என் பழைய கால சினேகிதர்கள் தேரை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி தேருண்டு. மொத்தமாக 500 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமத்தில் 5 சாதி இருக்கிறது. 5 சாதிக்கும் தனித்தனி தேர் புதைப்பது கூட மேல் சாதி எனச் சொல்லப்படுபவர்களுக்கு மேடான பகுதியில் கொஞ்சம் அப்படியே கீழே என அடுக்கடுக்காக இடம் பிரிக்கப்பட்டுள்ளது. எரிப்பதற்கு கூட ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கூடம். நகரத்தில் ஒரு இறப்பு எவ்வளவு எளிதாக முடிகிறது. பத்து பேர் சூழ ஐஸ் பெட்டியில் வைக்கப்படும் பிணம் ஒரு ஆம்னி வேனில் எடுத்துச் செல்லப்பட்டு யாரும் பின்தொடராமலே பிணம் எரியூட்டப்படும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது அங்கே சில மணி நேரங்களில் பிணத்தின் சாம்பலே கைக்குக் கிடைத்து விடுகிறது. இங்கே எத்தனை சம்பிரதாயங்கள் ஒரு இறப்புக்குக் கூடும் மனித முகங்களும் அதன் உள்ளங்கை ஆறுதல்களும் நன்றாக இருந்தாலும் அதனையும் மீறி ஏதோ ஒரு வித உயர்வைத் தருகிறது. அம்மாவை புதுப்பட்டுப் புடவை கட்டி விட்டு அழகாகக் குங்குமம் எல்லாம் வைத்துப் பிளந்திருக்கும் வாயை ஒடுக்கி நாடிக்கட்டுக் கட்டி இரும்புச் சேரில் உட்கார வைத்திருந்தார்கள். பல வருடங்கள் காணாத முகத்தில் எவ்வளவோ மாற்றம் இருந்தாலும் முன்பு என் மனதில் பதிந்திருந்த அம்மாவின் சாயல் துளியும் குறைந்த பாடில்லை. ஊதுபத்தி வாசமும், ரோஜா பூவின் திகட்டலும் பசியில் இருக்கும் என்னை மேலும் கிறங்க வைத்தது. என் முக பாவனையைப் பார்த்துக் கொண்டிருந்த டிரைவர் ஒரு சோடாவை வாங்கி வந்து கொடுத்தான். அதை நான் கையில் வாங்கிய நொடியில் எல்லா மனிதர்களது பார்வையும் என் மீது வந்தது நான் மிகவும் சங்கடத்தோடு அதை வேண்டா வெறுப்பாகக் குடிப்பது போல் பாவனை செய்து கொண்டு இரண்டு மடக்கு தொண்டையில் விட்டு நினைத்துக் கொண்டேன். மதிய சாப்பாட்டிற்குப் போயிருந்த உறுமிக்காரர்கள் மீண்டும் உரிமையை எடுத்து அடிக்க ஆரம்பித்ததும் ஆட்கள் வேகமாக அங்கு வர ஆரம்பித்தனர். நான்கு பேர் சேர்ந்து அம்மாவை சேரோடு அப்படியே தூக்கிக் கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றும் வரை அமைதியாக இருந்த பெண்கள் தேரில் ஏற்றியதும் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். அந்த பொய் அழுகையில் ஒரு சில குரலில் உண்மையாகவே ஈரமிருந்தது. நான் ஒரு வேட்டியுடன் கையில் சம்புராணிப் புகை போடப்பட்ட மண்பானையை கயிரோடு பிடித்துக் கொண்டு முன்னே நடக்க பின்னே அம்மா குலுங்கிக்கொண்டே வந்தாள். அவள் உடல் மற்றும் தேரிலிருந்த மாலையின் பூக்களைத் தேரை தள்ளிக் கொண்டு வந்த ஆட்கள் பிய்த்து சாலையில் போட்டுக்கொண்டே வந்தனர். கிட்டத்தட்ட ஊரே அந்த தேருக்குப் பின்னால் வந்தது. இடுகாடு வந்ததும் பெண்கள் அங்கே நின்று கொள்ள ஆண்கள் மட்டும் சுடுகாட்டுக்குப் போனார்கள். நோய்வாய்பட்டு இறந்த அம்மாவின் உடலை ஊர் மக்கள் கூடிப் பேசி எரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர், எனக்கு அழ வேண்டும் என்ற எண்ணமே சுத்தமாக தோன்றவில்லை. பல வருடங்களாகப் பார்க்காத அம்மாவைப் பற்றிய நினைவே கிட்டத்தட்ட அறுந்து போய்விட்டது. மனைவி குழந்தைகள் என வாழ்க்கை வேறாய் மாறிப் போயிருந்தது. கட்டைகளை அடுக்கி அதன் மேல் படுக்கை போல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அம்மாவைத் தூக்கிக் கிடத்தினர். எனக்கு மொட்டை எடுப்பதற்காகத் தனியாக ஒரு இடத்தில் உட்கார வைத்து முடித்திருத்துபவர் தலையில் நீரைத் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அம்மாவின் உடலில் மீது சிலர் சின்னதாக செதுக்கி வைத்திருக்கும் கட்டைகளை அடுக்காக எடுத்து வைத்தனர். அதில் பழக்கப்பட்டதைப் போன்றதோர் செய் நேர்த்தி தெரிந்தது. அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடி வந்த முப்பது வயதை ஓர் இளைஞன் பழைய சமாதி ஒன்றில் கால் தடுக்கி விழுந்தான். பல நாளாய் குளிக்காத சிக்கல்கள் நிறைந்த தலையோடு கருப்பு கோட்டும், பச்சை வேட்டியும் அணிந்திருந்த அந்த ஆள் மெல்ல எழுந்து பிணத்தை எரிக்கும் இடத்திற்கு வந்தான். சில நிமிடம் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் கட்டைகளை எடுத்து அம்மாவின் மீது அடுக்க ஆரம்பித்தான். அவன் கண்கள் அம்மாவின் முகத்தில் இருந்து விலகாமல் கைகள் மட்டும் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து ஒரு பெரியவர் அவனை பிடணியில் அடித்து “போடா ! அங்கிட்டு போய் நில்லுடா” என மிரட்டியதும் அவன் அவரை தள்ளி விட்டுவிட்டு மீண்டும் கட்டையை அடுக்க ஆரம்பித்தான். சிரைத்து என் முகத்திற்கு முன்னே விழுந்து கொண்டிருந்த என் தலை முடியின் ஊடே நான் அவனைப் பார்த்தேன். பெரியவரை தள்ளிவிட்டது எனக் கோபமடைந்த ஆட்கள் கூட்டமாக வந்து அவனைக் கட்டைகளை அடித்து இழுத்து ஓரமாக போவென விரட்டினர். பின்பு மீண்டும் கட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் தூரத்தில் ஒரு பிண சமாதியின் மேல் குத்த வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்து கொண்டு அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். “நிதமும் அந்த அம்மாபோட்ட சோத்தத் தின்னு வளந்த பய. அதேன் அது செத்துபோனத அவனால தாங்கிக்க முடியல. லூசு பயலா இருந்தாலும் ஆளு பாசக்காரனப்பா” என்றவாரே என் தலையை நேராக பிடித்துக் கொண்டு சிரைக்கையில் சொட்டை விழுந்து போன இடத்தை மழித்தார். கட்டைகள் அம்மாவின் முகத்திற்கு மேலே வைக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்த அந்த கிறுக்கன் வானத்தைப் பார்த்துக் கொண்டே திடீரென மார்பு அதிரும் வகையில் தொடர்ந்து அடித்துக் கொண்டு கத்தினான். அவன் மார்பில் அடித்துக்கொள்ளும் ஒவ்வொரு அடியும் இடிபோல் கேட்டது. பின்பு நகரும் மேகங்களைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டே அங்கிருந்து நடக்கத் துவங்கியவன் கொஞ்ச தூரம் சென்றதும் சத்தமாக சிரித்துக் கொண்டே நடனமாடியவாறு போனான். அவ்வளவு நேரம் பொறுமையாக அதனைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்னை அறியாமலே கண்களில் நீர் பனிக்கத் துவங்கியது. மொட்டை எடுத்ததும் திடுதிடுவென ஓடி ஓரமாக போய் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் என் ஆன்மாவின் கறைகளைக் கண்ணீரால் கழுவினேன்.
-sibi saravanan

கருத்துகள்
கருத்துரையிடுக