முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஞானச் சுடர் - சிறுகதை

 


ஞானச்சுடர்

 

  முத்தையனுக்கு இருளை விட ஒளி என்றால் அவ்வளவு பிரியம். ஒளியின் கைகளில் தன்னை புதைத்துக் கொண்டு உறங்க வேண்டும். அதுவும் அதிகாலை வெயில் தான் அவனது உறக்கத்திக்கான துவக்க நேரம். கல்லைக் காடுகளில் காட்டுப்பன்றிகள் புகுந்துவிடாமல் காவலுக்கு இருப்பதே அவனது பிரதான வேலை.

ஒளி ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது என்பார்கள். முத்தையனின் வாழ்வில் அது துளியுமில்லை.சிறுபிராயத்திலேயே அவனது அம்மா பஸ் ஓட்டுனரோடு ஓடிப்போய் விட்ட சேதி இன்னும் ஊர் வாய்களுக்குக் கேளிக்கை  ஆகிவிட்ட பின்பு நிம்மதியாக எப்படி வாழ்வைக் கழிக்க முடியும். அதுவும் அந்த அத்துவான இருளில் அவனது நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு எப்படி அவளால் அவ்வளவு எளிதாக தன்னை விட்டுப் போக முடிந்தது என நினைத்துப் புலம்புவதுண்டு. அந்த இருளில் பொழுது கூட அவனை அவ்வளவு ரணமாக பாதிக்கவில்லை. பகல் இருக்கிறதே எத்தனை வாய்களை அசைத்துப் பார்க்கிறது. ஓடுகாளி முண்ட.. அவுசாரி.. தேவிடியா.. இப்படி கேட்க முடியாத வசைகளை எங்களை சுமக்க சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட்டாள். முத்தையனின் அப்பா பிரமை பிடித்தார் போல் நின்றிருந்தார். ஒன்னுமறியாத திக்கு வாய் புருசனை விட்டு விட்டு அவள் போனதில் ஊர்க்காரர்களுக்கு வாயிலிட்டு மெல்ல அனுதாப சொற்கள் கிடைத்துவிட்டன.

வாய் பேச தெரியாத ஆம்பளைய இப்டி தவிக்கவிட்டு போய்ட்டாலே, சிரிக்கி முண்டஅவன் அப்பாவுக்கு அந்த வசைகளின் மீதிருந்த அனுதாபத்தை விட தன் மீது அவர்கள் சுமத்தும் குறைபாடுகள் தான் பெரியதாகப் பட்டது. அத்தனையும் அந்த ஒளியில் அரங்கேறிக்கொண்டிருந்தது. ஒளி தான் என்ன வக்கிரம் பிடித்தது பாருங்கள்?

 மின்சாரத்தின் மூலமாகப் பல் இளிக்கும் ஒளியில் அவனது அப்பாவின் முகத்தைப் பார்க்கச் சகிக்காத முத்தையன் கம்பளி போர்வை இழுத்துப் போர்த்தி இருளுக்குள் தன்னை புதைத்துக் கொண்டான். காலையிருந்து அடைத்து வைத்திருந்த அத்தனை துயரங்களும் கோர குரலில் கதறி அழுதது. கம்பளி போர்வை முள் குத்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். இனி அவனை ஊர் அவுசாரி புள்ள எனக்கூறும். ஓடிப்போனவளின் மகன் எனக்கூடச் சொல்லலாம். தாய் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுதும் அந்த வன்முறையைச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். இந்த இருள் தான் எவ்வளவு இனியது. யாருக்கும் தெரியாமல் தன்னை சூழ்ந்திருக்கும்  இருளால் அவனால் வெட்கமில்லாமல் கதறி அழுக முடிந்தது. இருளே முத்தையனின் அழுகையைக் கழுவிக் கொண்டிரு.

சூரிய கதிர்கள் சிறு துளையுள்ள ஜன்னல் ஓட்டைகளினூடே புகுந்து ஒரு புள்ளிக் குவியலாய் அவனது நெற்றியில் சுட்டது. ரொம்ம நேரச் சூட்டுக்குப்பின் அவன் திடுக்கிட்டுத் தூக்கத்திலிருந்து விழித்தான். வீட்டின் முற்றத்திற்குச் சென்று சூரியனைப் பார்த்து ஒளியை தன் முகத்தில் வாங்கிக்கொண்டு கண்ணீர் தாரை படிந்து போயிருந்த கன்னங்களைக் குளிர்ந்த நீரிட்டு துடைத்தான். வாயைக் கொப்பளித்து விட்டு தண்ணீர் குடிக்கலாமென சமையலறைக்குப் போனவனுக்கு ஒரு அதிர்ச்சி கதை காத்திருந்தது.ஆம் ஓடிப்போன பொண்டாட்டியினால் ஊர் மக்களிடம் அவமானப்பட்டு வாழப்பிடிக்காத திக்குவாய் ஆண்மகன் ஒருவன் தனது பத்து வயது பிள்ளையை விட்டு விட்டு அரிவாள் மனையால் தன் கழுத்தை அறுத்து கொண்டு தன்னை மாய்த்திருக்கிறான்.

  அந்த சமையலறை முழுதும் ரத்தம் இரவெல்லாம் ஊறி விரவி படர்ந்து கிடந்தது. ஏற்கனவே உறைந்து போயிருந்த ரத்தம் அவனது நாசிக்குப் புதிதாய் ஒரு மனத்தைத் தந்திருக்க வேண்டும். அந்த உயிர் துடித்துத் துடித்து அடங்கியதற்கான தடயங்கள் எங்குமிருந்தன. வெள்ளை வேட்டியில். ரத்தம் உறைந்து ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்தது. முத்தையன் திடமான மனநிலையில் ரத்தத்தை மிதித்து நடந்தான். அவன் பாதங்களில் பிசுபிசுத்த ரத்தத்தின் சூடு ஒவ்வொரு அடியிலும் அவனது கபாலத்தை அதிர வைத்தது. மெல்ல அவர் அருகே போய் கழுத்தை பார்த்தான். இரண்டு மூன்று சின்ன வெட்டுக் காயங்கள். அதனூடே ஆழமாய் பதிந்து போன ஒரு வெட்டு. சில முறைகள் சரியாகக் கழுத்தை அறுத்துப் பார்க்க முயற்சித்திருக்க வேண்டும். தற்கொலையைக் கூட சரியாகச் செய்யத் தெரியாத பெரிய கோழையா தனது தந்தை. அவனால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. 

   இருள் தரும் சுகந்தம். பகலில் வேட்டையாடப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத ஒரு அற்ப ஜீவியாய் அலைந்தான். ஊர் அவனை ஏசியது. எப்போதும் வசைச் சொற்களும், பழைய நினைவுகளுமாய் அவனை சீண்டிப்பார்க்க ஊர் வாய் தயங்கியதில்லை. முத்தையனால் அதனைச் சகிக்க முடியவில்லை. இனி இங்கே இருக்கக்கூடாது என தனக்குள் முடிவெடுத்துக்கொண்டான். தன் வரலாறு எதையும் தெரிந்து வைத்திருக்காத பிரபஞ்சத்தில் வாழ வேண்டுமென முடிவெடுத்து திருப்பூருக்குச் சென்றான்.

சதா உழைப்பை மட்டுமே தன் மேல் பூசிக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் அந்த ஊர் அவனை தன்னுள் திணித்துக்கொண்டது. பனியன் துணிகளுக்கு எம்ராயிட்ங் போடுவது, தையல், பேக்கிங் எனப் பல வேலைகளைக் கற்றுக்கொண்டு உழைத்தான். திருப்பூரைப் பொருத்தவரை உழைப்பு ஒன்றுதான் அவனை உயர்த்தும் என அறிந்து வைத்திருந்தவன். தனது வாலிப காலத்தை அதனூடே கழித்தான். இரவு நேரங்களில் வேலைக்குச் செல்வதே அவனுக்கு பிடித்தமானதாக இருந்தது. பகல் அவனது துக்கத்தைச் சுமக்கும் கருவி எனவே நினைத்தான். காலம் தன் தசைகளை நெளித்து பிரண்டோடியது. முத்தையனின் உடலும் வளர்ந்ததே ஒழியச் சதைகள் கூடவில்லை. ஒல்லியான உருவம் தான், சிவத்த நிறமென்றாலும் எத்துப்பல் அவனது அழகுக்குத் துரோகியாகிப் போனது. காதல் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் உழைப்பு மட்டுமே எல்லாம் என நினைத்து வாழ்ந்தான். நூலாம்படை அப்பிய அறையில் பிசுரு நாற்றமடிக்கும் துணிகளுக்கு இடையே அவன் குடிகொண்டிருந்தான்.

அது ஒரு பகல். கொடும் வெயிலை உமிழும் பகல். வெயிலைச் சகிக்க முடியாமல் முத்தையனின் உடல் சூட்டைக் கக்கியது. பண்டிகை விடுமுறை என்பதால் பகலில் வேலை செய்ய யாரும் வராத காரணத்தால் அன்று அவன் வேலைக்கு வந்திருந்தான். இரவு நேரங்களிலே முழித்துப் பழகிய உடல் பகலில் அவ்வளவு இலகுவாக வளைந்து கொடுக்காது என்பது அவனது கணிப்பு. மிசின் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிக் கொண்டே வேலை செய்தான். தூக்கக்கலக்கத்தில் கையை மிசினில் வைக்க அவனது மணிக்கட்டுவரை வெட்டி எடுத்து விட்டது. தனது கை வெட்டுப்பட்டு துண்டாகும் வரை தூக்கத்தில் திளைத்திருந்தவன் வலியில் கதறி அழுதான். அந்த மிசினில் ஓடிக்கொண்டிருந்த துணி முழுதும் ரத்த நிறத்திற்கு மாறியிருந்தது, அதனை பார்த்ததும்  முத்தையன் மயங்கி விழுந்தான். அதற்குப்பிறகு தைத்து மூட்டப்பட்ட மூட்டையைப் போல தான் அவனது வலதுகை இருந்தது. கை போனதால் முதலாளி கொஞ்சம் காசை கொடுத்து இனி கொஞ்சநாள் வேலைக்கு வராதே என அனுப்பிவிட்டார்.

வெறுமென அறையிலேயே கிடந்த முத்தையன் ஒரு கட்டத்தில் சுவரோடு பேச ஆரம்பித்தான். “ ஏன் இந்த ஒளி என்னை இப்படிச் சிதைக்கிறது.  அமைதியாக ஊர்ந்து போகும் இருளை விழுங்கிவிட்டு வரும் ஒளிக்கு தான் தன் மீது ஏன் இவ்வளவு வன்மம். ஒளியே நீ ஒரு துரோகி, ஒளியே நீ ஒரு பொறம்போக்கு. என்னை வாழவிடாமல் சாகடிக்கும் அற்ப பகலே நாசமாய் போ.” என புலம்பினான்.

திடீரென முத்தையனுக்கு தன் ஊருக்குப் போக வேண்டுமென ஆசை வந்தது. பால்யத்தில் தான் சுற்றித்திரிந்த தெருக்களையும், சொவர்க்கல் அடித்துக் குளித்த ஆற்றையும் தரிசிக்க நினைத்தான். கடந்த பத்து வருசங்களில் தன்னை எப்படியும் ஊர்க்காரர்கள் மறந்திருப்பார்கள். என நினைத்துக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான். மனித பிண்டங்களின் நடமாட்டமற்று தெருக்கள் மிரண்டு போயிருந்தன.

  இரண்டு மூன்று வீடுகளைத் தாண்டி செல்லும் போது காகமொன்று ஒரு மொட்டை சுவரில் உட்கார்ந்து கொண்டு அவனையே பார்த்தது. அதனைத் தாண்டி சென்ற பின்னும் அவனை விடாமல் பார்த்த காகத்தை மண்கட்டியை எடுத்து எறிந்தான். அது பறந்து போய் வேறொரு வீட்டின் கம்பத்தில் உட்கார்ந்து அவனை மீண்டும் பார்த்தது. மெல்ல நடந்து தனது வீட்டை நோக்கிப் போனான். ஒரு முட்டுச் சந்து திண்ணையில் உட்கார்ந்திருந்த  கிழவர் அவனை உற்றுப் பார்த்தார். முதிய வயது கண்களுக்கு இருக்கும் அதே கூர்மையும், ஒளிரும் கண்களும் அவனைப் பாதித்தது. அந்த கண்கள் பல வரலாற்று கதைகளை தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டு மிளிர்வதைப் போல் அவனுக்குத் தோன்றியது. மெல்ல கூர்ந்து கவனித்த கிழவர்

 யாரு நம்ம பஸ் டிரைவரு கூட ஓடிப்போனாளே ராணி அவ மகனா? அப்படியே ஆத்த ஜாடை விழுந்திருக்கு.இம்புட்டு நா எங்கயா இருந்த? ஆள பாக்கவே முடியலையே?”

முத்தையன் கிழவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே நடந்தான். ஊர் வாயில் விழுந்தால் அது ஜென்மத்துக்கு மாறாது என்பார்கள். அப்படித்தான் தன் கதையும் ஆகிப்போனதென நினைத்தான். இனி வருத்தப்பட என்ன இருக்கிறது. அவர்களுக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள இதைவிடப் பிரமாதமான சம்பவம் என்னவாக இருக்க முடியும்.

ஊருக்குள் வந்திருக்கும் புதிய மனிதனை வரவேற்க அந்த கிழவனைத் தவிர யாருமே இல்லை. எல்லாம் அதிகாலையிலேயே காட்டு வேலைக்குக் கிளம்பி விட்டார்கள்.இனி மசக்கையில் தான் கூடைவார்கள். முத்தையன் தனது வீடிருக்கும் தெருவை நோக்கி நடந்தான். மண் தரை சிமெண்ட் தரையாக மாறி அதுவும் கூட புண்களைப் போல ஆங்காங்கே குழிகளை வாங்கி பழையதாகிவிட்டது. தெரு முனையில் எழும்பு துருத்திக்கொண்டிருக்கும் ஒரு நாய் அவனைப் பார்த்தது. அதன் வலது நெற்றியிலிருந்த  புண்ணில் சீழ் பிடித்து கொசுறு மொய்த்தது. தன் கோர பார்வையால் முத்தையனை விடாது பார்த்துக்கொண்டிருந்தது. யாருமற்ற அந்த தெருவில் நாயின் பார்வை அவனை என்னமோ செய்தது. வேகமாக எட்டு வைத்து நடந்தான். மெல்லத் தனது வீட்டருகே போனான். அந்த நாய் அங்கயே தான் இருந்தது. ஆனால் அந்த கண்கள் மட்டும் அவனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.

 

அவன் பதற்றத்தோடு  பூட்டப்பட்டிருக்கும் கதவைத் திறக்க முயற்சித்தான். பின் பெரிய கல்லெடுத்து பூட்டை உடைத்தான். ஒவ்வொரு அடி பூட்டை அடிக்கும் போது நாய் பயமில்லாமல் அவனை நோக்கி வந்தது. மூன்றாவது அடியில் வீட்டுக்கு பத்தடிக்கு முன்னே வந்து விட்ட அந்த நாய் உறுமத் துவங்கியது. முத்தையன் பதற்றத்தில் கல்லைக் கீழே விட்டான். பின் மெல்லப் பூட்டை இழுத்ததும் திறந்து கொண்டது. திடுக்கென உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுக்கொண்டான். வீட்டுக்குள் முழுதும் இருள் நிரம்பியிருந்தது.

மெல்ல அந்த இருளுக்குள் நடந்தான். வெளியே கதவருகே நாயின் உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆக நாயின் உறுமல் சத்தம் அதிகரித்தது. பதற்றத்தில் முத்தையனின் மனம் அடித்துக்கொண்டது. ஜன்னல் எங்கிருக்கிறதென சுற்றிலும் தேடினான். அவன் போகும் திசையெல்லாம் நூலாம்படை அணைத்து கொண்டது. அவற்றின் ஊறல் முத்தையனை மேலும் பயமுறுத்தியது. பழைய நினைவில் தன் வீட்டை கற்பனை செய்து கொண்டான். எங்கே ஜன்னல் இருக்கிறது யோசித்துக்கொண்டே வலப்புறப்பாக நடந்தான். வெளியே நாயின் குரைப்பொலி அதிகரித்தது. படார் என தடுமாறி கீழே விழுந்தான். மனித குரலின் நாய் குரைப்பது போல அவனது பிரமைக்குத் தோன்றியது. வீடு முழுதும் அந்த ஒலி அதிர்ந்தது. முத்தையனின் தலை பிய்ந்துவிடுவதைப் போல் உணர்ந்தான். எந்த பக்கம் கை வைத்தாலும் பள்ளமிருப்பதை போல தோன்றியது. கால்களை எட்டு வைத்தால் குழிக்குள் புதைந்து பிடித்துக்கொண்டது. இப்போது நாயின் குரைப்பொலி அடங்கியது. பின் மெல்ல கைகளைத் தடவி நகர்ந்தான். மீண்டும் ஊளையிடும் சத்தம் வீடெங்கும் சிதறி தெரித்தது. அவனுக்குத் தலையே வெடித்து விடும் போலிருந்தது. களிமண் குழைப்பதைப் போல அவனது தலையை யாரோ பிசைவதாய் உணர்ந்தான். ஒன்றும் புரியாது முத்தையன் கோரமாக அழுதான். அவனதும் அழுகையும். நாயின் ஊளையிடும் அரவமும் ஒன்றுபோல அவனது செவி சவ்வை அதிர வைத்தது.

திடீரென தலையில் இடி விழுந்ததை போலொரு சத்தம். பிசைந்து கொண்டிருந்த அவன் தலை பிரக்ஷையற்று நின்றது.  கைப்பிடி அளவு ஒளியொன்று அவனது முகத்தைத் தடவிக்கொடுத்தது, நாயின் ஊளையிடும் அரவம் மெல்ல அடங்கியது. உடைந்த ஓட்டின் வழியே நுழைந்த அந்த ஒளி பிரபஞ்சத்தின் கடைசி எல்லையிருந்து வந்திருப்பதைப் போல அவன் உணர்ந்தான். அது அவனது முகத்தை இலகுவாகத் தடவிப்பார்ப்பதாய் நினைத்துக் கொண்டான். மனதின் பாரங்கள் அனைத்தும் அந்த ஒளிக்கற்றை தன்னுள் ஜீரணித்துக்கொண்டு தன்னை பரிசுத்தமாக்குவதாய் அவனுக்குத் தோன்றியது. அன்றிருந்து இருளை கொண்டாடி ஒளியை ஜீரணிக்க துவங்கினான். 

 

 

-சிபி சரவணன்

போன்:6379165176

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024_ஒரு அலசல்

  2024 - இல் நான் மிகப்பெரிய கெஜ புழு..தியாக இருந்தேன். வரும் வருடத்தில் இன்னும் மிகப்பெரிய கெஜ புழு..தியாக மாற போகிறேன். நான் அவ்வொரு ஆண்டு முடியும் போதும் போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக புழு..தி இருப்பதாக நினைத்து கொள்வதுண்டு. இல்லையென்றால் சில நேரம் என் கீழ்மை குணங்களை அளவிடுவதுண்டு. நான் போன ஆண்டை விட இந்த ஆண்டு எவ்வளவு கீழ்மை குணம் உள்ளவனாக மாறியிருக்கிறேன். எந்த அளவுக்கு என் அல்ப புத்திகள் அரங்கேறியிருக்கிறது என கணக்கிட்டு பார்ப்பேன். நான் ஒரு மகா சோம்பேறி . இலையை போல் தூக்கி ஆற்றில் போட்டால் மிதந்து மிதந்து போவேன். பாறையில் மோதாமல் போகும் சூட்சமும் தெரியும்.என்னை பெரிய பிடுங்கியாக எப்போதும் நினைப்பதில்லை. ஒரு நல்ல இயக்குனரிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது . நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.  நாம் சாதாரண கடன் கார குடும்பம் என்பதால் சூ..தை கிழிக்கும் சுமை வேறு நம்மை வேட்டையாடுகிறது. எல்லோரையும் போல் நமக்கு எல்லாம் அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. ஏதோ நெஞ்சில் உரமிருக்க ஓடுகிறோம். உடல் ரீதியாக நிறைய கோளாறுகள் இருக்கிறது. அப்படி பயந்து கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை தான் பா...

கெடா விருந்து - சிறுகதை

                     கெடா விருந்து    ப ள்ளிக் கூடத்தில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எங்கள் வகுப்பில் படர்ந்திருந்த சலசலப்பு மெல்ல மடிந்து பெரும் அமைதி நிலவியது . நான் கடைசி பெஞ்சுக்கு முன்பிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன் . எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்கள் மட்டும் அழுக்கு அப்பிய சட்டையை அணிந்திருப்பார்கள் . பொதுவாகவே அரசினர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மட்டும் எங்கள் வகுப்பில் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்போம் . அவர்களை பார்த்தாலே “ சொறி சிரங்கு பிடிச்சவங்களா ? போய் கடைசி பெஞ்சுல உக்காருங்கடா ?” என சமூக அறிவியல் ஆசிரியர்  துரத்துவார் . எங்கள் வகுப்பிலுள்ள ஐந்து பேரில் கோகுல் மட்டும் நன்றாக படிப்பான் . அவனை பார்த்தால் ஆறாவது படிக்கும் மாணவர்களை போல் அல்லாமல் உயரத்தில் சற்று பெரிய பையனாக இருப்பான் . அவனை வகுப்பில் எல்லோரும் கொக்கு என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் . தமிழாசிரியர் கூட அவனை “ இவன பாருங்கடா , மந்த குளத்துல நீந்துர அயிர மீனை கொத்துரவான...

All about 2025

 2025 சொல் வதற்கு இனிய ஆண்டாக இல்லா விட்டாலும் , வாழ்வின் அர்த்தங்களை புதிய பாதையில் எனக்கு உணர்த்திய ஆண்டு. கடந்த ஆண்டு முழுக்க , முழுக்க என்னை இழந்து கொண்டிருந்தேன் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது. சுய தெளிவும், சிந்தனையும் அற்று மற்றவர்களின் சொல் பேச்சை கெட்டு கடந்து வந்திருக்கிறேன் என கடைசியாக தான் புரிந்தது.  என் தனி தன்மையை நான் உணர தவறிய இந்த ஆண்டில் நிறைய பாடங்கள் கிடைத்தன. உடல் ரீதியாக நிறைய பலவீனங்களை சந்தித்து வந்த ஆண்டும் கூட.  என்னை மிகவும் நேசிப்பவர்களுக்காக என் ஆசையை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு வரலாம் என தோன்றிய ஆண்டு தான் இது. என் வாழ்வில் முதல் முதலாக காதல் உதிர்த்த ஆண்டும் இது தான். அந்த காதலில் கிடைத்த குதூகலமும் மன மகிழ்ச்சியும் சொல்லி அடங்காதவை. ஆனால் எதுவும் நிலையானது அல்ல என இயற்கை எனக்கு மெதுவாக தான் உணர்த்தியது. யார் மீது குறை கூறி எந்த வித பயனும் இல்லை. என்னை நான் மாற்றி கொள்வதில் தான் எல்லா தீர்வும் இருக்கிறது என மெதுவாக தான் புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டில் நேர்ந்த சம்பவங்களும், துயரங்களும் நம்மை இன்னும் வலிமையான மனிதனாக மாற்றும் ...