“ என்னடி திடீர்னு இப்படி சொல்ற ? “
“அம்மா , நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதாமா… “
“ அடி பாவி மகளே இதுக்காடி உனக்கு செலவு பண்ணி ராணி மாதிரி கட்டி குடுத்தோம். “
இடையில் ரஞ்சனியின் அப்பா
“ ராதா சும்மா கத்தாதடி அவளே இப்ப தான் வந்துருக்கா .. அவளை போய் ஏன் டீ திட்டிட்டு இருக்க … போமா… நீ போயி ரெஃப்ரஸ் ஆகிட்டு ரெஸ்ட் எடும்மா நம்ம அப்பறம் பேசுவோம். “
ரஞ்சனி எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாக அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். வீடு முழுதும் பெரும் அமைதி.இன்னோரு அறையில் படித்துக் கொண்டிருந்த ரஞ்சனியின் தம்பி தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பார்த்தான். பெற்றோர் இருவரும் முறைத்து பார்த்துக் கொண்டனர். வாசிங் மிஷீன் சத்தம் சற்று அதிகரித்து கத்த துவங்கி வீட்டின் அமைதியை சீர்குலைத்தது.
துவைத்த துணியை மொட்ட மாடிக்கு தூக்கி கொண்டு ராதாவால் ஏற முடியவில்லை. முன்பை விட இப்போது அது பயங்கர கனமானதாக இருந்தது. ஒவ்வொரு படிக்கட்டை கடப்பதற்கும் அவள் மிக சிரமப்பட்டாள்.
“ கல்யாணம் ஆகி இதோடு மூன்று வருடம் ஆகிறது. ஒரு நாள் கூட அவள் கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததே இல்லையே ? இப்போது மட்டும் இவளுக்கு என்ன ஆனது ?”
இப்படியாய் ராதாவின் மனம் போட்டு குடைந்தது.ரஞ்சனியின் அப்பாவும் வழக்கமாக வாசிக்கும் செய்தித்தாளை இப்போதும் வாசிக்கிறார். ஆனால் எழுத்தைப் பார்த்துக்கொண்டே கண்கள் நகர்கிறதே ஒழிய என்ன எழுதியிருக்கிறது என இன்னும் அவர் மூளைக்கு செல்லவில்லை. அவருக்கும் அதே குழப்பம். “ மாப்பிளைக்கு போன் அடித்தால் சுவிச் ஆப் என வருகிறது, என்ன பிரச்சனையாக இருக்கும் ? வெறுமென சின்ன பிரச்சனையாக இருக்குமோ ? “ பல யோசனைகள் அவரை போட்டு பிசைந்தது.
“ சாப்புட வாடி “
“ எனக்கு பசிக்கல”
“ அப்படி என்ன தாண்டி பிரச்சனை ?”
“ அம்மா , he is home sexual ம்மா”
“ அப்படினா ? “
“ அய்யோ அம்மா, கல்யாணம் ஆகி மூணு வருசம் ஆச்சே இது வரைக்கும் ஒரு தடவையாவது உங்களுக்குள்ள அதெல்லாம் சரியா நடக்குதானு கேட்டிருக்கியா ? குழந்தை இல்லைனு சொன்னப்போ கூட எனக்கு தைராய்டு இருக்கது தான் பிரச்சனை, நான் குண்டா இருக்குறது தா பிரச்சனைனு சொன்னவ தான நீ “
“ என்னடி சொல்ற, அப்போ உங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவும் நடக்கலயா ?”
“ அம்மா, பிளீஸ் மா என்ன கொஞ்சம் தனியா விட்றிய , சேர்ந்து முடிவு பண்ணிதா நாங்க டைவஸ்க்கு அப்ளே பண்ணிருக்கோம், எல்லாமே பிரச்சனையில்லாம முடிஞ்சுடும் “
ராதா பதிலுக்கு எதுவுமே பேசவில்லை. அவளது முகம் வெளுத்துக் காணப்பட்டது. கண்களின் ஓரம் கண்ணீர் திவலைகளாய் முந்தி வந்தன. அறைக்கு வெளியே வந்து கதவை சாத்தி விட்டாள். இவர்கள் பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டதை முறைத்தார். ரஞ்சனியின் தம்பி தனது செல்போனை எடுத்து ஹோமோ செக்சுவல் என்று கூகுளில் தேடி அதனைப் பற்றி ஆர்வமாக படித்தான். வீடு மீண்டும் பேரமைதிக்குள்ளானது. முக்கு தெருவில் சப்போட்டா விற்பவனின் குரல் மட்டும் திரும்ப, திரும்ப கேட்டது.
ரஞ்சனிக்கும் , சிவாவிற்கும் கல்யாணம் ஆகி இதோடு மூன்று வருடம் ஆகிறது.அப்போதிருந்தே இருவரிடையும் எந்த வித உடல் பிணைப்பும் இல்லை. முதலில் ரஞ்சனி அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனை தான் பின்னால் சரியாகி விடும் என நினைத்திருந்தாள். ஆனால் நாள் ஆக, ஆக இது தொடர்ந்தது.
சிவா அவள் மீதிருந்த தீராக்காதலால் அவளுக்கு வேண்டிய எல்லா வசதிகளைகளையும் செய்தான். இருவருக்கும் இடையே உடல் ரீதியான ஈர்ப்பு இல்லை என்றாலும் மனதளவில் ஆழமாக அன்பில் திளைத்தனர்.
ரஞ்சனிக்கு சிவாவிடம் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என கேட்க தயக்கம். மேலும் அப்படி செய்வது அவரை காயப்படுத்தும் என்று அதனை கேட்காதிருந்தாள். ஆனால் அவள் உடலில் காமத்தின் வேட்கை கொளுந்து எரிந்தது. காட்டுவாசிகள் பாதைகளுக்காக காடுகளை எரிப்பது போல் அவள் நிறைவேறாத காமத்தினை நினைத்து, நினைத்து தன்னை தானே எரித்துக்கொண்டாள்.ரஞ்சனிக்கு வேறு ஒரு ஆணோடு உடலுறவு வைத்து கொள்ள முடியும் , ஆனால் அவள் சிவாவை உண்மையாக காதலித்தாள்.சிவாவின் மீதான காதலில் காமமொன்றும் கொடிய எதிரியில்லை என நினைத்தாள். சில சமயம் அவள் சுயஇன்பம் செய்து கொண்டு தன் மனசலனத்தை தனிப்பதுண்டு.ஓரிரு இரவில் சிவாவிடம் கெஞ்சி கூத்தாடி ஓரல் செக்ஸ் செய்ய சொல்வாள். அப்படி சிவாவை சம்மதிக்க வைக்க அவள் படாத பாடு பட வேண்டியிருக்கும்.
இப்படியுமாக காலம் உருண்டோடியது..
அன்று ரஞ்சனிக்கு பிறந்தநாள் எப்போதும் போல யாரையும் அழைக்காமல் இருவர் மட்டுமே பிறந்த நாள் கொண்டாடினர். கேக் வெட்டி சாப்பிட்டு விட்டு ரஞ்சனி டீவி பார்த்தாள் . அப்போது சிவா டீவியை ஆப் செய்தவாரே நேராக ரஞ்சனி கால்களுக்கு அடியே வந்தமர்ந்தான்.
சிவா அவளது கால்களை தனது தொடைகள் மேல் எடுத்துப்போட்டு லேசாக ஒவ்வொரு விரலாக சொடுக்கெடுத்தான்.
“ ரஞ்சனி,இனிமே நான் உன்னோட லைப்ப கெடுக்க விரும்பல…இவ்வளவு நான் உன்ன ஏமாத்திட்டே….” சிவாவின் கண்ணீர் அவளின் விரல்களில் பட்டு சிதறியது.
“ டேய் லூசு என்னடா ஆச்சு உனக்கு ? ஏண்டா இப்படி பேசுற ? “
“ இல்லடி நா உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். நீ செக்சுவல் பீலிங்கல எவ்ளோ கஷ்டபடுறனு எனக்கு தெரியும் “
“ சரி விடு செக்ஸ் மட்டும் தான் லைப்பா ?”
“ அப்படி இல்லை டீ , எனக்கும் பீளிங்கஸ் இருக்கு , மத்த டிராண்ஸ் ஜெண்டர்லாம் பாத்தா எனக்கு எவ்ளோ பொறாமையா இருக்கும் தெரியுமா ? “
“ டேய் …என்னாடா ஆச்சு உனக்கு ஏண்டா இப்படி பண்ற ?”
“இல்லடி என்னால முடியல டி, நம்ம பிரிஞ்சுட்றது தான் நல்லதுனு தோணுது”
“ லூசு மாதிரி பேசாதடா ? எனக்கு தெரியா குடிச்சுட்டு வந்தியா ? “
சிவா ரஞ்சனியின் பாதங்களில் தன் முகத்தை புதைத்து கொண்டு அழுதான். அவளுக்கு இப்போது தான் புரிய ஆரம்பித்தது.
“ சரி இப்ப நான் என்ன பண்ணனும் “
“ பேபி , லிவ் மீ அலோன்… நான் இனிமேலாவது எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும்னு ஆசை படுறேன்.பிளீஸ் என்ன மன்னுச்சிடு “
“ சரி நீ எப்ப பாம்பே போற ?”
சிவா திடுக்கிட்டு அவளை அண்ணாந்து பார்த்தான். அவள் கண்களிலும் நீர் தேங்கியிருந்தது. ரஞ்சனி தனது கைகளை விரித்து அவனை அழைத்தான். சிவா உணர்ச்சி கொந்தளிப்பில் அவளை கட்டிபிடித்து அவளது நெற்றி , காது , மார்பு , கழுத்து என இதுவரை அவளை முத்தமிடாத இடங்களில் எல்லாம் உணர்ச்சி பொங்க முத்தமிட்டான். ரஞ்சனி எந்த வித உணர்வுகளுமற்று எதிரே இருந்த மீன் தொட்டியை பார்த்தாள்.கூலாங்கற்களாலும், சிறு, சிறு சிப்பிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தொட்டியில் ஒரு ஒற்றை மீன் மட்டும் வெளியேற வழியில்லை என தெரிந்தும் நான்கு பக்க சுவர்களிலும் மோதி ,மோதி நிலை மறந்து நீந்தியது.

கருத்துகள்
கருத்துரையிடுக